இந்தியா மற்றும் பிரேசில் இடையே அத்தியாவசிய கனிமங்கள் மற்றும் அரிய வகை உலோகங்கள் குறித்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா டெல்லியில் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக ஏ.என்.ஐ தெரிவித்துள்ளது.
இதனை கூட்டாக செய்தியாளர் சந்திப்பு நடந்தது. இதில் பேசிய பிரதமர் மோடி, "அத்தியாவசிய கனிமங்கள் மற்றும் அரிய வகை உலோகங்களுக்கான ஒப்பந்தம் வலுவான விநியோகச் சங்கிலியை உருவாக்க முக்கியமானது. பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பும் பெருகி வருகிறது. இது பரஸ்பர நம்பிக்கை மற்றும் மூலோபாய ஒருங்கிணைப்பின் சிறந்த உதாரணம். இந்த லாபகரமான கூட்டாண்மையை தொடர்ந்து வலுப்படுத்துவோம்," என்று குறிப்பிட்டார்.
{image-enhanced-image-26-jpg-1771667902276_1771667902842-600x338.jpg tamil.goodreturns.in}
மேலும், "சுகாதார மற்றும் மருந்துத் துறைகளிலும் ஒத்துழைப்புக்கு அபரிமிதமான சாத்தியங்கள் உள்ளன. இந்தியாவிடம் இருந்து பிரேசிலுக்கு மலிவான மற்றும் தரமான மருந்துகளின் விநியோகத்தை அதிகரிக்க பணியாற்றுவோம்," என்றும் பிரதமர் மோடி கூறினார்.
பிரேசில் அதிபர் லூலா , கடந்த ஜூலையில் பிரேசிலியாவில் தமது "நண்பர் மோடியை" சந்தித்துப் பேசியதை இரு நாடுகளின் உறவை வலுப்படுத்தும் ஒரு "மைல்கல்" என்று விவரித்தார். பாதுகாப்பு, உணவு பாதுகாப்பு, எரிசக்தி மாற்றம், டிஜிட்டல் மாற்றம், தொழில்துறை கூட்டாண்மைகள் என ஐந்து முக்கிய பகுதிகளில் இருதரப்பு ஒத்துழைப்பு அப்போதே மறுசீரமைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பிரேசில்-இந்தியா மூலோபாயக் கூட்டாண்மை 20 ஆண்டுகளை நிறைவு செய்வதை டெல்லியில் கொண்டாடிய அதிபர் லூலா, "பல ஒப்பந்தங்களுக்கு இன்று செயல் வடிவம் அளித்துள்ளோம்" என்றார். இந்தியாவின் அதிநவீன துறைகளான தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு போன்றவற்றின் வளர்ச்சி பிரேசிலுடன் ஆழமான ஒத்துழைப்புக்கு வழிவகுக்கும் எனவும் பாராட்டினார்.
அதிபர் லூலா கடந்த புதன்கிழமை இந்தியா வந்தார். பிப்ரவரி 16 முதல் 20 வரை பாரத் மண்டபத்தில் நடைபெறும் 'இந்தியா ஏஐ இம்பாக்ட் உச்சிமாநாடு 2026'-ல் பங்கேற்க, அமைச்சர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் கொண்ட குழுவிற்கு அவர் தலைமை தாங்கினார்.
இந்நிலையில் அரிய வகை உலோகங்கள், கனிமங்களுக்கான சீனாவின் சார்புத்தன்மையைக் குறைக்க இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இச்சந்திப்பு முக்கியத்துவம் சேர்க்கிறது. இத்துறையில் கிட்டத்தட்ட ஏகபோக உரிமையுள்ள சீனாவுக்கு மாற்றாக, இந்தியா உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, புதிய சப்ளையர்களைத் தேடுகிறது.
பிரேசில், உலகின் இரண்டாவது பெரிய அத்தியாவசிய கனிம இருப்புக்களைக் கொண்ட நாடாகும். மின்சார வாகனங்கள், சூரிய சக்தி பேனல்கள், ஸ்மார்ட்போன்கள், ஜெட் என்ஜின்கள் மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணைகள் போன்ற நவீன தொழில்நுட்பங்களில் இவ்வகை அரிய வகை கனிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியா இப்போது இந்த துறை சார்ந்த உற்பத்தியில் தான் கவனம், செலுத்துகிறது.


Click it and Unblock the Notifications