இந்தியா முழுவதும் தற்போது வாகன உரிமையாளர்கள் மத்தியில் இருக்கும் முக்கியமான பிரச்சனை எத்தனால் கலந்த பெட்ரோல் மூலம் ஏற்படும் மைலேஜ் பாதிப்பு தான், மத்திய அரசு எத்தனால் கலப்பை குறைக்க முடியாது என்பதை திட்டவட்டமாக கூறியது மட்டும் அல்லாமல் நாட்டின் அன்னிய செலவாணி சேமிப்புக்கும், இறக்குமதி செலவு குறைப்பிற்கும் எரிபொருளில் எத்தனால் கலப்பு முக்கியம் என்பதில் உறுதியாக உள்ளது.
இந்த நிலையில் எத்தனால் பயன்பாட்டை அதிகரித்த மத்திய அரசு புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது, வாகனங்களில் பயன்படுத்துவதை தாண்டி வேறு எந்த இடத்தில் எத்தனால் பயன்படுத்த முடியும் என்பதை ஆய்வு செய்து எத்தனால் ஏடிஎம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

இதன் படி இந்தியாவில் எத்தனாலை முக்கிய சமையல் எரிபொருளாக மாற்றவும், மக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்க எத்தனால் ஏடிஎம் அமைக்கவும் திட்டமிட்டு வருகிறது.
மத்திய அரசு பயோஃப்யூயல் பயன்பாட்டை பெரிய அளவில் மேம்படுத்த திட்டமிட்ட அதற்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. இந்தியாவில் எத்தனால் உற்பத்திக்கான பெரும் கட்டமைப்பும், முதலீடும் செய்யப்பட்டு உள்ளது.
எத்தனால் உற்பத்தி அதிகரிக்கும்போது இதற்கான நுகர்வு முறையை அதிகாரித்தால் மட்டுமே சப்ளை டிமாண்ட் பிரச்சனை இல்லாமல் விவசாயிகள் முதல் மக்கள் வரை.. பயன் பெற முடியும்.
இதன் அடிப்படையில் இந்தியாவில் தற்போது E20 அளவீட்டை அடைந்த நிலையில் மாற்று பயன்பாட்டு முறையை கண்டறியும் திட்டத்தில் மத்திய அரசு சமையல் எரிபொருள், flex-fuel வாகனங்கள், விமான எரிபொருள், ஏற்றுமதி வாய்ப்புகளையும் தேடி வருகிறது.
இந்தியாவில் கடந்த 10 வருடமாக பெட்ரோலில் எத்தனால் கலப்பு மெல்ல மெல்ல அதிகரிக்கப்பட்டு நாடு முழுவதும் E20 அளவீட்டை எட்டியுள்ளது. இதனால் மத்திய அரசு 2014-15 முதல் 1.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய செலவாணியை சேமித்து உள்ளது, இதன் மூலம் விவசாயிகள் மற்றும் எத்தனால் உற்பத்தியாளர்கள் பெரிய அளவில் பலன் அடைந்துள்ளனர்.
தற்போது உத்தர பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் புது எத்தனால் உற்பத்தி மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் நாட்டின் மொத்த எத்தனால் உற்பத்தி என்பது தற்போது 20 பில்லியன் லிட்டராக உயர்ந்துள்ளது, நடப்பு நிதியாண்டில் கூடுதலாக 4 பில்லியன் லிட்டர் சந்தைக்கு வர உள்ளது. சுமார் 24 பில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யப்படும்வேளையில் 11 மில்லியன் லிட்டர் பெட்ரோலில் கலப்பதற்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது. மதுபான தயாரிப்பு, பார்மா, கெமிக்கல் நிறுவனங்கள் வருடத்திற்கு 3-3.5 பில்லியன் லிட்டர் எத்தனால் வருடத்திற்கு பயன்படுத்துகிறது. இதன் மூலம் 7 பில்லியன் லிட்டர் உபரி உள்ளது.
இதை நேபாளம், பங்களாதேஷ், இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதேவேளையில் தான் இந்திய வீடுகளில் பயன்படுத்தும் எல்பிஜி சிலிண்டர்களுக்கு மாற்றாக எத்தனால் பயன்படுத்த துவங்கினால் பெரிய அளவில் பயன்படுத்தலாம், இது உற்பத்தியை அதிகரிக்கவும், எல்பிஜி இறக்குமதியை குறைக்கவும் முடியும் என்பதால் இத்திட்டத்தை தீவிரமாக மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.
மேலும் எத்தனால் மூலம் இயங்கும் ஸ்டவ் தயாரிப்பு, வடிவமைப்பு போன்ற புதிய ரீடைல் வர்த்தக வாய்ப்பும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மக்களுக்கு எத்தனால்-ஐ தடையின்றி 24 மணிநேரமும் வழங்கும் வகையில் எத்தனால் ஏடிஎம் அமைத்து தேவைப்படும் போது ரீல்பிள் செய்யும் கட்டமைப்பையும் கொண்டு வரும் திட்டத்தை ஆய்வு செய்து வருகிறது மத்திய அரசு.


Click it and Unblock the Notifications