இந்தியாவில் பெட்ரோல், டீசல் தேவையைப் பூர்த்தி செய்ய வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் வாயிலாகத் தான் ஈடுகட்டப்பட்டு வருகிறது. இது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கும், ரூபாய் மதிப்பு வளர்ச்சிக்கும் தடையாக இருக்கிறது.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவை குறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பெட்ரோலில் எத்தனால் (Ethanol) கலக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது.
இந்நிலையில் இன்று எத்தனால் விலையை நாடாளுமன்றத்தில் லிட்டருக்கு 1.47 ரூபாய் வரையில் அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
எத்தனால் விலை உயர்வு
கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் (Ethanol)-ஐ பெட்ரோலில் கலக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில் டிசம்பர் முதல் துவங்க இருக்கும் மார்கெட்டிங் வருடத்திற்கு ஒரு லிட்டர் எத்தனால் விலையை 1.47 ரூபாய் அதிகரிக்க நாடாளுமன்றத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
கச்சா எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி
இதேபோல் மத்திய அரசு இன்று எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை தயாரிக்கப் பொதுத்துறை கச்சா எண்ணெய் மார்கெட்டிங் நிறுவனங்கள் நேரடியாக எத்தனால் (Ethanol) வாங்கும் திட்டத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் கச்சா எண்ணெய் மார்கெட்டிங் நிறுவனங்கள் நேரடியாக எத்தனால் வாங்க முடியும் என அனுராங் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
விலை அளவீடுகள்
இதன் மூலம் சி ஹெவி மொலாசஸ் மூலம் தயாரிக்கப்படும் எத்தனால் விலை லிட்டருக்கு 46.66 ரூபாயாகவும், பி ஹெவி மொலாசஸ் மூலம் தயாரிக்கப்படும் எத்தனால் விலை லிட்டருக்கு 59.08 ரூபாயாகவும், இதேபோல் கரும்பு சாறு மற்றும் சர்க்கரை பாகு ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனால் விலை 63.45 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
எத்தனால் கலப்பு அளவீடு
இந்தியாவில் பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவீடு 2020-21 மார்கெட்டிங் வருடத்தில் 8 சதவீத அளவீட்டைத் தொட்ட நிலையில், அடுத்த ஆண்டு 10 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. மேலும் 2025ஆம் ஆண்டுக்குள் இந்த அளவீடு 20 சதவீதம் வரையில் உயர்த்தப்பட உள்ளது.
பல நன்மைகள்
இந்தத் திட்டம் மூலம் மத்திய அரசின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவுகள் குறைவது மட்டும் அல்லாமல் கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளும் அதிகப் பலன் அடைவார்கள். மேலும் இத்திட்டம் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு அரசு நிலுவை வைத்துள்ள பாக்கியை விரைவாகத் தீர்க்கவும் முடியும் என மத்திய அரசு நம்புகிறது.


Click it and Unblock the Notifications