உலக நாடுகள் கிரிகோரியன் காலண்டரை மையமாகக் கொண்டு 12 மாதங்களை.. ஒரு ஆண்டாக பின்பற்றி வருகின்றன. ஆனால் ஒரே ஒரு நாட்டில் மட்டும் ஒரு ஆண்டுக்கு 13 மாதங்கள் உள்ளன. அது எந்த நாடு என்று தெரியுமா? ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா தான் 13 மாதங்களை கொண்ட ஆண்டை பின்பற்றுகிறது. அந்நாட்டின் காலண்டர் கிரிகோரியன் காலண்டரைப் பின்பற்றவில்லை.
சுமார் 7 முதல் 8 ஆண்டுகள் வரை அந்நாட்டின் நாட்காட்டி பின் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பல நூற்றாண்டுகள் கடந்தும் எத்தியோப்பியாவில் இன்னும் இந்த காலண்டர் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

13 மாதங்களைக் கொண்ட எத்தியோப்பியன் காலண்டர்: உலக நாடுகளில் ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்களைக் கொண்டது தான் ஒரு ஆண்டு. இதில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 28 அல்லது 29 நாட்கள் வரும். மற்ற மாதங்களில் 30 அல்லது 31 நாட்கள் இருக்கும். ஆனால் எத்தியோப்பியாவில் முதல் 12 மாதங்களுக்கு 30 நாட்கள் உள்ளன. அதாவது முதல் 12 மாதங்களில் மொத்தமாக 360 நாட்கள்.
ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் சில மாதங்கள் 31 நாட்கள் இருக்கும். அதே போல எத்தியோப்பியன் காலண்டரில் முதல் 12 மாதங்களில் மீதம் இருக்கும் நாட்கள் 13-வது மாதத்திற்கு கணக்கில் கொள்ளப்படுகிறது. இந்த கூடுதல் மாதத்தை பகுமே என்று அழைக்கின்றனர். 12-வது மாதத்தை நெஹாசே என்று அழைக்கின்றனர்.
உலக நாடுகளைப் போலவே எத்தியோப்பியாவிலும் லீப் இயர் இருக்கிறது. லீப் இயர் அல்லாத ஆண்டில் பகுமே மாதம் 5 நாட்களை மட்டுமே கொண்டிருக்கும். அதே சமயம் லீப் இயராக இருந்தால் அதில் ஒரு நாள் கூடுதலாக இருக்கும். அதாவது பகுமே மாதத்தில் 6 நாட்கள் இருக்கும். ஆக எத்தியோப்பியன் காலண்டரைப் பொறுத்தவரையில் சாதாரண ஆண்டில் 365 நாட்கள் இருக்கும். லீப் ஆண்டில் 366 நாட்கள் இருக்கும்.
எத்தியோப்பியன் கடைபிடிக்கும் மாதங்களின் பெயர்: நம் நாட்டில் ஜனவரி மாதம் முதல் மாதமாக இருக்கிறது. அதேபோல எத்தியோப்பியன் காலண்டரில் மெஸ்கெரெம் முதல் மாதம். பின்னர் டிக்கிம்ட், ஹிடார், தஹ்சாஸ், திர், யெகாடிட், மெகாபிட், மியாஸ்யா, கின்போட், செனே, ஹம்லே, நெஹாசே, பகுமே என மொத்தம் 13 மாதங்கள் உள்ளன.
உலக நாடுகளில் எல்லாம் புத்தாண்டு ஜனவரி 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால் எத்தியோப்பியாவில் செப்டம்பர் மாதத்தில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் காலண்டரில் செப்டம்பர் 11-ம் தேதி தான் எத்தியோப்பியாவில் புத்தாண்டு தினமாக இருக்கிறது.
எத்தியோப்பியா காலண்டரின் மற்றொரு சுவாரசியமான அம்சம் என்ன தெரியுமா? உலக நாடுகளைக் காட்டிலும் எத்தியோப்பியன் காலண்டர் சுமார் 7 முதல் 8 ஆண்டுகள் வரை பின்தங்கியுள்ளது, அதாவது கிரிகோரியன் காலண்டரில் 2026-ஆம் ஆண்டாக இருந்தால்.. எத்தியோப்பியா காலண்டரில் அந்த ஆண்டு 2018 அல்லது 2019-ஆக இருக்கும்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை எத்தியோப்பியா ஆர்த்தோடாக்ஸ் தேவாலயங்கள் வெவ்வேறு வரலாற்று ரீதியான கணக்கீட்டின் அடிப்படையில் வகுத்துள்ளனர். இதுதான் கிரிகோரியன் காலண்டரைக் காட்டிலும் எத்தியோப்பியன் காலண்டர் மாறுபட்டு இருப்பதற்கான முக்கிய காரணம்.
வணிகம், பயணம் மற்றும் இதர விஷயங்களுக்கு கிரிகோரியன் காலண்டர் பயன்படுத்தப்பட்டாலும்.. எத்தியோப்பிய மக்கள் அன்றாட வாழ்க்கை முறை மற்றும் பண்டிகைகளுக்கு 13 மாத காலண்டரையே பயன்படுத்துகின்றனர்.


Click it and Unblock the Notifications
