கிரிப்டோகரன்சி சந்தையில் தற்போது மாறுபட்ட வர்த்தகச் சூழ்நிலை நிலவுகிறது என்றால் மிகையில்லை, அமெரிக்கப் பங்குச்சந்தை ஒமிக்ரான் வைரஸ் மற்றும் பெடரல் ரிசர்வ் அறிவிப்பால் பெரிய அளவில் சரிவை எதிர்கொண்ட நிலையில் அதிகப்படியான முதலீடுகளும், முதலீட்டாளர்களும் தற்போது கிரிப்டோகரன்சி சந்தை பக்கம் திரும்பியுள்ளது.
கிரிப்டோ சந்தைக்குத் திரும்பிய முதலீட்டாளர்கள் முன்னணி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யாமல் சிறிய மற்றும் பெயர் தெரியாத புதிய கிரிப்டோ கரன்சியில் அதிகம் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். இதனால் எந்தக் கரன்சி எப்போது உயரும் என்பது யாருக்கும் தெரியாத நிலை உருவாக்கியுள்ளது. இதற்கிடையில் பல கிரிப்டோகரன்சிகள் முதலீட்டாளர்களையும் ஏமாற்றவும் செய்கிறது.
இந்த இக்கட்டான முதலீட்டுச் சூழ்நிலையில் யூரோ ஷிபா இனு என்ற பெயர் தெரியாத கிரிப்டோகரன்சி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.
கிரிப்டோ சந்தை
சர்வதேச கிரிப்டோ சந்தையில் பல ஆயிரம் கிரிப்டோகரன்சிகள் உள்ளது, இதை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம், அதேபோல் யார் வேண்டுமானாலும் வர்த்தகச் சந்தைக்குக் கொண்டு வரலாம். இப்படியிருக்கும் போது தினமும் ஒரு கிரிப்டோகரன்சி உருவாக்கப்பட்டு வருகிறது.
யூரோ ஷிபா இனு
இப்படிப் பெயர் தெரியாத ஒரு கிரிப்டோகரன்சி தான் இன்று முக்கியச் செய்தியாக மாறியுள்ளது. யூரோ ஷிபா இனு என்னும் ஒரு கிரிப்டோகரன்சி கடந்த 24 மணிநேரத்தில் 25,000 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகக் காயின்மார்கெட்கேப் தளம் அறிவித்துள்ளது.
25,000 சதவீத வளர்ச்சி
இந்த அதிரடி வளர்ச்சியின் மூலம் யூரோ ஷிபா இனு (ESHIB) மதிப்பு வெறும் 0.000000000003 டாலரில் இருந்து 0.000000000076 டாலர் வரையில் உயர்ந்து சுமார் 25,000 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆனால் சில மணிநேரத்தில் அதிகப்படியான உயர்வை இழந்து தற்போது 0.00000000001718 டாலருக்கு சரிந்துள்ளது.
10 சதவீத கமிஷன்
யூரோ ஷிபா இனு கிரிப்டோகரன்சியின் உரிமையாளர்கள் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 5 சதவீதம் கமிஷன் தொகையாகவும், 5 சதவீத தொகையை இயற்கை சீற்றங்கள் பாதிப்புக்கான நிவாரண நிதிக்காகவும், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்குப் பெறுகிறது.
ரீடைல் முதலீட்டாளர்கள்
யூரோ ஷிபா இனு தற்போது உலகின் மிக முக்கியப் பிரச்சனையைக் குறிவைத்து இயங்கும் காரணத்தால் ரீடைல் முதலீட்டாளர்கள் அதிகம் விரும்பி முதலீடு செய்து வருகின்றனர், இதேபோல் இது எந்த ஒரு நாட்டின் அரசுடைய கிரிப்டோகரன்சியும் இல்லை, non-profit projectஆகச் செயல்படுகிறது.
சந்தை மதிப்பு
யூரோ ஷிபா இனு-வின் இன்றைய உச்ச நிலைில் இதன் மொத்த சந்தை மதிப்பு 230,000,000 டாலர். மேலும் இந்த யூரோ ஷிபா இனு காயின் 420,000,000,000,000,000 வரையில் மட்டுமே உற்பத்தி செய்யப்படும், தற்போது 410,000,000,000,000,000 காயின் புழக்கத்தில் உள்ளது. மேலும் இந்தக் காயின் மிகவும் பிரபலமான ஷிபா இனு என்னும் மீம் காயின் பெயரிலேயே துவங்கப்பட்டதால் பிரபலமாகியுள்ளது.
பிட்காயின்
இதேவேளையில் பிட்காயின் 2.78 சதவீத சரிவுடன் 56,393.82 டாலருக்கும், எதிரியம் 3.89 சதவீத சரிவுடன் 4,517.22 டாலருக்கும், சோலானா 0.91 சதவீத சரிவுடன் 223.53 டாலருக்கும், ரிப்பிள் 3.56 சதவீத சரிவுடன் 0.9727 டாலருக்கும், போல்காடாட் 5.16 சதவீத சரிவுடன் 36.12 டாலருக்கும், ஸ்டெல்லார் 3.95 சதவீத சரிவுடன் 0.3257 டாலருக்கும் சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications