டெல்லி: அமெரிக்காவைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியா கார் இறக்குமதிக்கான வரியை முழுவதுமாக நீக்க வேண்டும் என வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி எக்கனாமிக் டைம்ஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில். ஐரோப்பிய ஒன்றியம் இந்தியா கார்களுக்கு விதிக்கும் இறக்குமதி வரியை முழுமையாக நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பதாக குறிப்பிடுகிறது. கடந்த வாரம் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் கார்கள் குறிப்பாக மின்சார கார்களுக்கு இந்தியா விதிக்கக் கூடிய இறக்குமதி வரியை முழுவதுமாக நீக்க வேண்டும் என வலியுறுத்தியது.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் இருநாட்டு வர்த்தக உறவு தொடர்பான பேச்சுவார்த்தையின் போது அமெரிக்கா தரப்பில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. வரி விவகாரத்தில் அமெரிக்க அரசை சமாதானப்படுத்தும் முயற்சியாக மத்திய அரசும் சில வரி சலுகைகளை வழங்க முன்வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் அதேபோன்ற ஒரு கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்திருக்கிறது. அதாவது ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உட்பட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான இறக்குமதி வரியை இந்தியா குறைக்க வேண்டும் அல்லது முழுவதுமாக நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறதாம். ஒரு வேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கையை ஏற்று அரசு கார்களுக்கான இறக்குமதி வரியை குறைத்தாலோ அல்லது முழுவதுமாக நீக்கினாலோ ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனங்களான ஃபோக்ஸ்வேகன் , மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்களுக்கு அது பெரிய பரிசாக அமையும்.
உலக பணக்காரரான எலான் மஸ்கிற்கு சொந்தமான டெஸ்லா நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலை ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் இருப்பதால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கப்படும் சலுகை டெஸ்லாவுக்கும் சாதகமாக அமையும்.
கடந்த வாரம் இது தொடர்பாக மத்திய அமைச்சகங்களுக்கு இடையே நடைபெற்ற சந்திப்பின்போது மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம், கன தொழில் துறை அமைச்சகத்திடமும், வாகனத்துறை பிரதிநிதிகள் இடமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த கோரிக்கை குறித்து ஆலோசனை நடத்தி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவில் தற்போது டாடா மோட்டார்ஸ், மகேந்திரா & மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் கார் விற்பனையில் முன்னிலையில் இருக்கின்றன. இந்த சூழலில் அரசு வெளிநாட்டில் இருந்து கார்கள் இறக்குமதி செய்வதற்கான வரியை குறைத்தால் உள்நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனங்கள் பாதிக்கப்படும். எனவே உள்நாட்டை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனங்கள் வரியை குறைக்க கூடாது என வலியுறுத்துவதாக சொல்லப்படுகிறது.
மின்சார கார்கள் பிரிவில் 2029 ஆம் ஆண்டு வரை வரியை முழுவதுமாக நீக்கும் நடவடிக்கையை கையில் எடுக்க கூடாது என கோரிக்கை வைத்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications