அவுரங்காபாத்: இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நகர்ப்புறங்களில் குறிப்பாக நாம் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டினை அதிகமாக காண முடிகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை ஏத்தர், ஓலா, பஜாஜ், டிவிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணியில் இருக்கின்றன. இந்த நிலையில் ஏத்தர் நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத்தில் புதிய உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது.

இந்தியாவிலேயே எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் முன்னிலையில் இருக்கக்கூடிய மாநிலம் மகாராஷ்டிரா. எலக்ட்ரிக் வாகனங்கள் அதிக அளவில் விற்பனையாக கூடிய மற்றொரு மாநிலமான குஜராத்திற்கு மகாராஷ்டிராவில் இருந்து எளிதாக எலக்ட்ரிக் வாகனங்களை கொண்டு சேர்த்து விட முடியும்.
இது தவிர டெல்லி மும்பை எக்ஸ்பிரஸ்வே அமைந்திருப்பதன் காரணமாக மகாராஷ்டிராவில் இருந்து எலக்ட்ரிக் வாகனங்களை மற்ற வட மாநிலங்களுக்கு கொண்டு செல்வது என்பது எளிதாக இருக்கிறது. எனவே தான் பல்வேறு எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் தங்களது ஆலைகளை நிறுவி வருகின்றன.
தற்போது ஏத்தர் நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் பகுதியில் புதிய உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது. இதற்கு பல்வேறு சாதகமான அம்சங்கள் அங்கு இருப்பது தான் காரணம்.
ஏற்கனவே அவுரங்காபாத் ஒரு வாகன உற்பத்தி மையம். எனவே அங்கு திறமையான வேலையாட்கள் கிடைப்பது மற்றும் வாகன உற்பத்திக்கான சூழல் என்பது மிகவும் சாதகமாக இருக்கிறது . இதனால் ஏத்தர் நிறுவனத்தால் உடனடியாக ஆட்களை பணி நியமனம் செய்து தங்களுடைய வாகன உற்பத்தியை துரிதப்படுத்த முடியும்.
மகாராஷ்டிரா சந்தையை பிடிக்க வேண்டும் என்ற காரணத்தினாலும் ஏத்தர் அங்கே உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது. பஜாஜ் நிறுவனத்திற்கு எதிராக ஏத்தர் நிறுவனம் இப்படி ஒரு முடிவினை எடுத்திருப்பதாக இந்த துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போது எலக்ட்ரிக் வாகன ஸ்கூட்டர் சந்தையில் 13 சதவீத சந்தையை பஜாஜ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் விற்பனையை குறிப்பிட்டு பார்க்கும்போது பஜாஜ் நிறுவனம் தயாரிக்க கூடிய பெரும்பாலான எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மகாராஷ்டிராவிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.
பஜாஜ் நிறுவனம் புனேவிலுள்ள தங்களுடைய விற்பனை ஆலையில் தயாரிக்கக்கூடிய பெரும்பாலான எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை மகாராஷ்டிரா மாநிலத்திலேயே விற்பனை செய்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட விகிதத்திலான வாகனங்கள் தான் மற்ற மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.
எனவே அங்கே விற்பனையாக கூடிய எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் முதலிடத்தில் இருப்பது பஜாஜ். அந்த இடத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் தான் ஏத்தர் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications