பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு டெஸ்லா நிறுவனத்தை ஈர்க்கும் இலக்குடன் மார்ச் மாதம் புதிதாக எலக்ட்ரிக் வாகன கொள்கையை அறிவித்தது. இந்த கொள்கையின் கீழ் முதலீடு செய்வதற்கான கூடுதல் வழிகாட்டுதல்களை இந்திய அரசு வகுக்கும் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய எலக்ட்ரிக் வாகன கொள்கையின் கீழ் சீன ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியச் சந்தைக்குள் நுழையும் என சந்தையில் ஆய்வுகள் வெளியான நிலையில் தற்போது கொள்கையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த கார் நிறுவனங்களின் முதலீட்டு விண்ணப்பங்கள் "மிகவும் கடுமையான பரிசோதனை"க்கு உட்படுத்தப்படும் என்றும், ஏற்கனவே இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் இந்தக் கொள்கையின் கீழ் விண்ணப்பிக்க புதிய துணை நிறுவனங்களைத் தொடங்க வேண்டியதில்லை என்றும் அதுகுறித்து அறிந்த அரசு அதிகாரி கூறினார்.
மத்திய அரசு இந்த புதிய எலக்ட்ரிக் வாகன கொள்கையை டெஸ்லா நிறுவனத்தை இந்தியாவில் ஈர்ப்பதற்காகக் கொண்டு வரப்பட்டது. ஆனால் டெஸ்லா-வின் காலாண்டு முடிவுகள் மிகவும் மோசமாக இருந்த காரணத்தால் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டது.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க், ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு வருவதாக இருந்த தனது பயணத்தைக் கடைசி நேரத்தில் ரத்து செய்த சில வாரங்களில் இந்த விதிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய மின்சார வாகனக் கொள்கையின் கீழ், டெஸ்லா இன்னும் இந்திய அரசிடம் தனது இந்தியத் திட்டங்களைத் தெரிவிக்கவில்லை. ஏப்ரல் 21-22 தேதிகளில் இந்தியாவுக்கு வருகை தரத் திட்டமிடப்பட்டிருந்த மஸ்க், காரணமாகக் கடைசி நேரத்தில் தனது பயணத்தை ஒத்திவைத்தார்.
மஸ்க் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இந்த பயணத்தின்போது சந்திப்பதாக இருந்தது. ஆனால், அடுத்த ஒரு வாரத்தில் எலான் மஸ்க் திடீரென சீனாவுக்குச் சென்று பல அதிகாரிகளை அடுத்தடுத்து சந்தித்தார்.
மின்சார வாகனத் துறையில் சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்குமான நடவடிக்கையாக இந்தக் கூடுதல் வழிகாட்டுதல்கள் பார்க்கப்படுகின்றன.
இதன் மூலம், இந்தியாவில் மின்சார வாகன உற்பத்திக்குத் தேவையான தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டைக் கொண்டுவரும் நிறுவனங்களுக்கு அரசு ஊக்கமளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - சீனா எல்லை பிரச்சனைக்குப் பின்பு இந்தியச் சந்தையில் சீன முதலீட்டுக்கும், சீனாவைச் சார்ந்த நிறுவன முதலீட்டுக்கும் மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகள், ஆய்வுகள் மூலம் தடை விதித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா போன்ற மிகப்பெரிய சந்தையைச் சீனா விட்டுவிடக் கூடாது என்பதற்காகப் பல மாற்று வழிகளைத் தேடி வருகிறது.
இந்த நிலையில் தற்போது சீனாவின் முன்னணி எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான லீப்மோட்டார் (Leapmotor) நிறுவனம், இந்தியச் சந்தையில் கால் பதிக்க உலகளவில் பிரபலமான வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பான ஸ்டெல்லான்டிஸ் (Stellantis) நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.


Click it and Unblock the Notifications