இந்தியாவில் 2000 ரூபாய் அறிமுகம் செய்யும் போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்குவதாக அறிவித்தது, இதேபோல் 2000 ரூபாய் நோட்டைப் புழக்கத்திலிருந்து வெளியேற்றிய பின்பு டிஜிட்டல் பணப் பரிமாற்றம் உச்சத்தை அடைந்திருக்கும் வேளையிலும் 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தியதற்கான நோக்கம் நிறைவேறியது எனத் தெரிவித்தது.
இந்த சூழ்நிலையில் ரொக்க பணத்தின் புழக்கம் நாட்டில் எப்படியிருக்கிறது..? இன்னும் பணம் தான் சந்தையில் கிங்-ஆ என்ற கேள்வி எழுந்துள்ளது..? உண்மை நிலவரம் என்ன..?

மார்ச் 2023 ம் ஆண்டு இறுதியில் ரூ.33.5 லட்சம் கோடியாக இருந்த ரொக்க பணத்தின் பணப்புழக்க மதிப்பு, ஓராண்டு காலத்தில் ரூ.1.3 லட்சம் கோடி அதிகரித்து, மார்ச் 2024 ம் ஆண்டு இறுதியில் ரூ.34.8 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஆனால், இந்த வளர்ச்சி விகிதம் கடந்த ஐந்த ஆண்டுகளில் மிகக் குறைவாகும்.
2024 ஆம் நிதியாண்டில் ரொக்கத்தின் மதிப்பு அதிகரித்து இருந்தாலும், வளர்ச்சி விகிதம் 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைவான வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது, இது டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தின் ஆதிக்கம் காரணமாகக் குறைவான வளர்ச்சி பதிவாகியிருக்கக் கூடும்.
சந்தையில் புழக்கத்தில் இருக்கும் ரொக்க பணத்தின் மதிப்பு ஜிடிபி அளவீட்டு உடன் ஒப்பிட்டுக் கணக்கிடும் போது, 2024ம் நிதியாண்டில், ரொக்கத்தின் மதிப்பு 4 சதவீதம் அதிகரித்திருந்தாலும், ஜிடிபி வளர்ச்சி அதைவிட அதிகமாக இருந்தது. இதன் காரணமாக, ஜிடிபியின் உடன் ஒப்பிடும் போது ரொக்க பணத்தின் பங்கு குறைந்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் அதிக அளவில் ரொக்கத்தைச் சேமித்து வைத்ததால், 2021-22ம் நிதியாண்டில் ரொக்கத்தின் மதிப்பு 10 சதவீதம் வரை அதிகரித்திருந்தது. கடந்த 2022-23 நிதியாண்டில் கூட, 7 சதவீதம் வளர்ச்சி இருந்தது.
2023 மே 19 ஆம் தேதி ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. ஆனால், ரூ.500 நோட்டுகளின் அதிகரிப்பு இதை ஈடுசெய்துள்ளது. மார்ச் 2023 நிலவரப்படி, ரூ.2000 நோட்டுகளின் மதிப்பு ரூ.3.6 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், மார்ச் 2024 நிலவரப்படி அது ரூ.8,202 கோடியாகவே உள்ளது.
அதே சமயம், ரூ.500 நோட்டுகளின் மதிப்பு ரூ.25.8 லட்சம் கோடியிலிருந்து ரூ.30.1 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. தற்போது, ரொக்கத்தின் மொத்த மதிப்பில் 86.5 சதவீதம் ரூ.500 நோட்டுகளே ஆகும். இதேபோல் 100 ரூபாய் நோட்டு மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் 1.8 லட்சம் கோடியில் இருந்து 2.1 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் 200 ரூபாய் நோட்டு மதிப்பு 1.3 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 1.5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications