2018ம் ஆண்டில் குருகிராமை தலைமையிடமாக கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவமான ப்ளூ ஸ்மார்ட், நாட்டில் முதல் முறையாக முழுக்க முழுக்க மின்சார வாகனங்களை கொண்டு வாடகை கார் சேவையை அறிமுகம் செய்தது. இந்த ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்தை தொடங்கியவர்கள், இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ள ஜென்சோல் இன்ஜினியரிங் நிறுவனத்தின் புரோமோட்டர்களான அன்மோல் சிங் ஜக்கி மற்றும் புனித் சிங் ஜக்கி ஆகியோர்தான்.
ப்ளூ ஸ்மார்ட் நிறுவனம் மின்சார வாகனங்கள் வாங்குவதற்காக வாங்கிய கடனை, சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியது உள்ளிட்டதனிப்பட்ட செலவுகளுக்காக அன்மோல் சிங் ஜக்கி மற்றும் புனித் சிங் ஜக்கி ஆகியோர் பயன்படுத்தியதாக செபி குற்றம் சாட்டியது. இதனையடுத்து தனது செயல்பாடுகளை ப்ளூ ஸ்மார்ட் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தின் எதிர்காலம் மற்றும் நிறுவனத்தில் தாங்கள் செய்த முதலீடு குறித்து முதலீட்டாளர்களுக்கு பெரும் கவலை ஏற்படுத்தியுள்ளது.

ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்தின் மின்சார மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கார்கள் சேவை என்ற ஐடியா பல பிரபல முதலீட்டாளர்களை ஈர்த்தது. அவர்களின் மிகவும் முக்கியமான நபர்கள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி, நடிகை தீபிக படுகோன், பிரபல தொழிலதிபர் சஞ்சீவ் பஜாஜ் மற்றும் பாரத் பே இணை நிறுவனர் அஷ்னீர் குரோவர்.
இந்த சூழ்நிலையில், முதலீட்டு தளமும், தனியார் ஈக்விட்டி நிறுவனமுமான எவர்சோர்ஸ் கேபிட்டல் நிறுவனம் ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகிறது. அதேசமயம் இரண்டு விஷயங்களுக்கு சம்மதம் என்றால் ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்தை வாங்க தயாராக இருப்பதாக எவர்சோர்ஸ் தெரிவித்துள்ளது. ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்தை வாங்க ரூ.800-1,000 கோடி வரை கொடுக்க எவர்சோர்ஸ் முன்வந்துள்ளது.
இந்த ஒப்பந்தம் நிறைவடைந்தால் ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்தின் மதிப்பு கடைசியாக அறியப்பட்ட மதிப்பீடான சுமார் ரூ.2,561 கோடியை காட்டிலும் குறைந்தது 60 சதவீதம் குறைவாக இருக்கும். அடுத்து ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவிலிருந்து அன்மோல் சிங் ஜக்கி மற்றும் புனித் சிங் ஜக்கி இருவரும் வெளியேற வேண்டும்.
இந்த நிபந்தனைகளுக்கும் ஒப்புக்கொண்டால் ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்தை வாங்க தயாராக உள்ளதாக எவர்சோர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எவர்சோர்ஸ் நிறுவனம் ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்தை தனது போர்ட்ஃபோலியோ நிறுவனமான அர்பன் டெக்னாலஜிஸூடன் இணைக்க திட்டமிட்டுள்ளது. இணைப்பிற்கு பிறகு ஒருங்கிணைந்த நிறுவனத்தில் சுமார் 10 கோடி டாலர் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக எவர்சோர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications