டெல்லி: இந்தியாவில் 70 வயதை கடந்த அனைவருக்கும் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்துள்ளது.
இந்த அரசின் எம்பிக்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி, சபாநாயகர் தேர்வு என பல்வேறு அலுவல்கள் நாடாளுமன்றத்தில் நடைபெற்றன. இதனை அடுத்து இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.

மத்திய அரசின் சாதனைகள் மற்றும் மத்திய அரசு மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதில் குறிப்பிடத்தக்கது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள். அதாவது 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை கிடைக்கும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்பது மத்திய அரசு செயல்படுத்தி வரக்கூடிய இலவச மருத்துவ காப்பீடு திட்டம் ஆகும். இந்த திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அமலில் இருக்கிறது.
இந்த திட்டத்தில் இணைந்து கொண்ட குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. அதாவது ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்பாட்டில் இருக்கக்கூடிய அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் இந்த அட்டையினை காண்பித்து 5 லட்சம் ரூபாய் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியும்.
இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்பது முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்துடன் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. முன்னதாக நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய திரௌபதி முர்மு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் மூலம் 55 கோடி பயனாளிகள் இலவச மருத்துவ சேவைகளை பெற்றிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
மத்திய அரசு ஏற்கனவே மலிவு விலை மருந்தகங்களை செயல்படுத்தி வரும் நிலையில், நாடு முழுவதும் கூடுதலாக 25,000 மலிவு விலை மருந்தகங்கள் அமைக்கப்படும் என்ற உறுதியையும் அவர் அளித்தார். சர்வதேச அளவில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் தான் மிகப்பெரிய ஒரு பொது மருத்துவ காப்பீட்டு திட்டமாக அறியப்படுகிறது. கிட்டதட்ட 12 கோடி குடும்பங்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ காப்பீடு அரசால் வழங்கப்படுகிறது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications