சென்னை: இந்தியாவில் ஜிசிசி எனப்படும் பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகளின் எண்ணிக்கை 2029 ஆம் ஆண்டுக்குள் பெருமளவில் அதிகரிக்கும் என நாஸ்காம் தலைவர் ராஜேஷ் நம்பியார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எக்னாமிக் டைம்ஸுக்கு பேட்டி அளித்துள்ள இந்திய ஐடி நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காமின் தலைவர் ராஜேஷ் நம்பியார் இந்தியாவில் ஜிசிசி மையங்களின் எண்ணிக்கையும் அதில் வேலைவாய்ப்பும் அதிகரித்து வருவதாக கூறியுள்ளார். தற்போது இந்தியாவில் 1700 ஜிசிசி மையங்கள் செயல்படுகின்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் புதிதாக 400 ஜிசிசி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன என தெரிவித்துள்ள நாஸ்காம் தலைவர் ராஜேஷ் நம்பியார், ஒவ்வொரு வாரமும் இந்தியாவில் இரண்டு புதிய ஜிசிசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
வரும் 2029 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஜிசிசி மையங்களின் எண்ணிக்கை 2200 என்ற எண்ணிக்கையை தாண்டி இருக்கும் என ராஜேஷ் நம்பியார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்தியாவில் செயல்படக்கூடிய ஜிசிசி மையங்கள் இங்கே தங்களுடைய செயல்பாடுகளை விரிவாக்கம் செய்து புதிதாக ஆட்களை பணிக்கு தேர்வு செய்கின்றன.
அது மட்டும் இல்லாமல் புதிதாக ஜிசிசி மையங்களும் நிறுவப்படுகின்றன என குறிப்பிட்டுள்ள அவர் இந்தியாவில் ஜிசிசி மையங்களில் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
ஜிசிசி மையங்கள் எண்ணிக்கை அதிகரிப்பது ஐ.டி துறைக்கு ஏற்படும் இழப்பு என கருதக்கூடாது என தெரிவித்துள்ள அவர், இந்தியாவைப் பொறுத்தவரை இரண்டு துறைகளுக்குமே ஒரு சாதகமான அம்சமாக மாறி இருக்கிறது என கூறுகிறார்.
தற்போது ஜிசிசி மையங்கள் இந்தியாவில் தங்களுடைய அலுவலகங்களை நிறுவுவதற்கு என்னென்ன வசதிகள் தேவைப்படுகிறது, மனித வளம் எப்படி தேவைப்படுகிறது என்பது குறித்து நாஸ்காம் ஆய்வு செய்து வருவதாகவும் இது தொடர்பாக பல்வேறு அரசு அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தி ஜிசிசி மையங்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருமாறு வலியுறுத்தி வருவதாகவும் ராஜேஷ் நம்பியார் கூறியுள்ளார்.
மேக்ரோ பொருளாதாரம் மற்றும் குறிப்பிட்ட நாடுகளுக்கு இடையிலான மோதல்களால் இந்திய ஐடி துறை சவால்களை சந்தித்து வருகிறது என தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஐடி துறையின் மதிப்பு 254 பில்லியன் டாலர்கள் என குறிப்பிட்டுள்ள அவர் தற்போது செயற்கை நுண்ணறிவு துறையில் இந்திய ஐடி நிறுவனங்கள் தீவிர கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். 2030 ஆம் ஆண்டுக்குள் இந்திய ஐடி துறைகளின் வருவாய் 350 பில்லியன் டாலர்களை எட்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் செயற்கை நுண்ணறிவால் யாருடைய வேலையும் பறி போகாது, ஆனால் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த தெரிந்தவர்களால், அதை பற்றி தெரியாதவர்களின் வேலை பறி போகும் என குறிப்பிட்டுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications