ஒரு நாள் ஆபா குப்தா மற்றும் அவருடைய கணவர் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது புதிதாக ஒரு அலுவலகம் தொடங்க வேண்டுமானால் அதற்கான அலுவலக பொருட்களை வாங்குவதில் எவ்வளவு சிரமங்கள் உள்ளன என்பது குறித்தும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். அப்போதுதான் இருவருக்கும் ஒரு ஐடியா தோன்றியது. அதுவே "ஆன்ட் மாஸ்காட்" என்ற நிறுவனத்தை தொடங்க வழி வகுத்தது.
ஆன்லைனில் எக்கச்சக்க பிசினஸ் ஐடியாக்கள் குறித்து பார்த்திருப்போம். ஆனால் ஆபா குப்தா மற்றும் அவருடைய கணவர் இணைந்து தொடங்கிய இந்த ஐடியா யாராலும் யோசிக்க முடியாதது என்றே சொல்லலாம்.

பெங்களூரில் ஃபோர்டிஸ் மருத்துவமனை கட்டப்படும் போது அந்த வேலையில் தான் ஈடுபட்டிருந்ததாகவும், மருத்துவமனைக்கு தேவைப்படும் பொருட்களை வாங்குவது சவாலாக இருந்ததாகவும் ஆபா தன் கணவரிடம் கூறியுள்ளார். அதன் பிறகு இருவரும் பேசிக் கலந்தாலோசித்து இந்நிறுவனத்தை நிறுவினர்.
ஆன்ட் மாஸ்காட் நிறுவனத்தில் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் சப்ளையர்கள் உள்ளனர். இதன் மூலம் ஒரு நிறுவனம் புதிதாக தொடங்கப்பட்டால் அதற்கு தேவைப்படும் பொருட்களை ஒரே இடத்தில் வாங்கிக் கொள்ளலாம். உதாரணமாக புது நிறுவனம் தொடங்கையில் லேப்டாப்புகள், நாற்காலிகள் ,மேசைகள் உள்ளிட்ட பல சாமான்கள் தேவைப்படும். அதற்கு ஒவ்வொரு இடத்திற்கும் சென்று அலையாமல் இந்த ஒரே ஒரு இணையதளத்தின் மூலம் தேவைப்படும் பொருட்களை வாங்க முடியும்.
2016-ஆம் ஆண்டில், ஆபா ஃபோர்டிஸ் மருத்துவமனையில் தனது HR பதவியை ராஜினாமா செய்து, அவர்களின் சேமிப்பில் இருந்து ரூ.10 லட்சத்தை முதலீடு செய்து, வீட்டிலிருந்து தொழிலைத் தொடங்கினார். அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற தளங்கள் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்தாலும், ஆண்ட் மாஸ்காட் வணிகங்களின் தனித்துவமான தேவைகளை நிவர்த்தி செய்து, B2B பிரிவில் கவனம் செலுத்த முடிவு செய்தது.
ஆரம்ப கால விற்பனை வீழ்ச்சி மற்றும் கோவிட் காலத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள் இருந்த போதும் ஆண்ட் மாஸ்காட் நிறுவனம் சீராக வளரத் தொடங்கியது. இன்று இந்தத் தளத்தில் 350-க்கும் மேற்பட்ட பிராண்டுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. வெளிப்படையான பில்லிங் மற்றும் தொடர்ச்சியான ஆர்டர்களும் கிடைக்கிறது. இந்த தம்பதியினரின் கடின உழைப்பின் காரணமாக ஒரு காலத்தில் வீட்டில் இயங்கிய இந்த ஸ்டார்ட்அப் ரூ.16 கோடி வருமானம் ஈட்டக்கூடிய நிறுவனமாக மாறியுள்ளது.
அலுவலகங்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் கிப்ட்களை பெறுவதற்கு இந்நிறுவனம் பெரிதும் உதவி வருகிறது. இன்று இந்நிறுவனத்தில் உலகப்புகழ் பெற்ற பிராண்டுகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் தனிப்பயனாக்கப்பட்ட பொருட்களை நிறுவனங்கள் கஷ்டமைஸ் செய்து பெற்றுக்கொள்ளலாம். அனைவரும் பி2சி-யில் கவனம் செலுத்துகையில் இந்நிறுவனம் பி2பி-யை குறிவைத்து இயங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications