பிட்காயினில் முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் லாபத்திற்கு எப்படி வரி விதிக்க வேண்டும் என்பது குறித்து ஜோத்பூரை சேர்ந்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் முக்கிய உத்தரவை வழங்கியுள்ளது.
முன்னாள் இன்போசிஸ் ஊழியர் ஒருவர் கடந்த 2015ஆம் ஆண்டில் பிட்காயினில் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். பின்னர் அதனை 6.69 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இந்த விற்பனையின் மூலம் அவருக்கு கிடைத்த லாபத்திற்கு வருமான வரித்துறை சார்பாக அதிக அளவில் வரி விதிக்கப்பட்டது.

ஆனால் அவர் இந்த விற்பனைக்கு அவர் 33 லட்சம் ரூபாய் மட்டுமே வருமான வரியாக செலுத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வருமான வரித்துறை அவர் கூடுதலாக வரி செலுத்த வேண்டும் என கூறியிருக்கிறது.
இதனை அடுத்து அந்த நபர் ஜோத்பூரில் இருக்கும் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் பிட்காயின் எனப்படும் கிரிப்டோ கரன்சியின் மூலம் இந்த நபர் விற்பனை செய்த கிரிப்டோ கரன்சி என்பது அவருடைய மூலதன சொத்து என வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அது தவிர இந்த முதலீட்டை அவர் தனக்கு இன்போசிஸ் நிறுவனத்தில் கிடைத்த ஊதியத்திலிருந்து தான் மேற்கொண்டு இருக்கிறார் என்றும் தீர்ப்பாயம் தன்னுடைய தீர்ப்பில் சுட்டிக்காட்டி உள்ளது.
வருமான வரி சட்டத்தின் பிரிவு 54இன் கீழ் ஒரு நபர் விற்பனையின் மூலம் கிடைத்த லாபத்தில் 20% தொகையை மட்டுமே வரியாக செலுத்தினால் போதும் என்றும் 4.95 கோடி ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை தீர்ப்பாயம் தெளிவுப்படுத்தியுள்ளது.
மேலும் இந்த நபர் தொடர்ச்சியாக கிரிப்டோ கரன்சியை வாங்குவது மற்றும் விற்பனை செய்வது போன்ற செயலில் ஈடுபடவில்லை. அவருடைய நோக்கம் இதனை ஒரு முதலீட்டாக வாங்கி நீண்ட காலத்திற்கு வைத்திருந்து பின்னர் விற்பனை செய்வதுதான் என குறிப்பிட்டுள்ளது.
இந்த நபர் 2015-16இல் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளார் அதனை 2020-21 ஆம் நிதி ஆண்டில் விற்பனை செய்துள்ளார். அவருடைய நோக்கம் நீண்ட காலத்திற்கு இதனை வைத்திருக்க வேண்டும் என்பதுதான். அப்படி இருக்கும்போது இதனை மூலதன சொத்தாக தான் கருத வேண்டும் என கூறியுள்ளது.
இவ்வாறு தனக்கு கிடைத்த லாபத்தைக் கொண்டு அந்த நபர் மீண்டும் வீடு வாங்குவதற்காக தான் பயன்படுத்தியுள்ளார். அதாவது அந்த லாபத்தை அவர் மீண்டும் முதலீடு தான் செய்திருக்கிறார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளில் செய்யப்படும் முதலீடுகளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் லாபத்தை மூலதன ஆதாயமாக கருத வேண்டுமே தவிர மற்ற மூலங்களிலிருந்து கிடைக்கக்கூடிய வருமானமாக கருதக்கூடாது என தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications