ஐடி வேலையை உதறி தள்ளிவிட்டு தற்போது மாதம் கோடிகளில் வருமானம் பார்த்து வருகிறார் ஒரு பெண். 6 வருட அனுபவத்துடன் 60,000 ரூபாய் வருமானம் பெற்று வந்த இந்த ஐடி ஊழியர் திடீரென சொந்தத் தொழிலை கையில் எடுக்க முடிவு செய்துள்ளார். தற்போது தனது தாத்தாவின் பாரம்பரிய தொழிலான நெய் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார் இந்த மூன்றாம் தலைமுறை பெண் . இதற்கு முன்னர் தான் வாங்கிய சம்பளத்தை விட தற்போது தனக்கு போதுமான வருமானம் வருவதாகவும் கூறியுள்ளார்.
மாதம் 8 டன் வரை நெய் உற்பத்தி செய்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கும் சப்ளை செய்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்திற்கு அருகே உள்ள கள்ளிமந்தயம் என்னும் சிற்றூறில் ஒரு பால் விற்பனையாளருக்கு பிறந்தவர் ராஜசுதா.

கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் கிராஜுவேட்டான ராஜசுதா, ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அங்கு 6 வருட அனுபவம் இருந்ததால் ரூ. 60,000 வரை வருமானமும் பார்த்து வந்துள்ளார். IT தொழில் ஒருபுறம் இருந்தும் தனது தந்தையின் பால் வியாபாரத்திலும் ஒரு பகுதியாக இருந்து வந்துள்ளார்.
திடீரென தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட தங்கள் வீட்டின் பாரம்பரிய தொழிலை அப்படியே விட்டுவிட மனமின்றி தனது வேலையையே உதறித் தள்ளிவிட்டு நெய் தொழிலில் ஈடுபடத் தொடங்கியுள்ளார். பால் தொழிலை நெய் தொழிலாக மாற்றி தற்போது வெற்றி கண்டு நின்று கொண்டிருக்கிறார் ராஜசுதா. இந்தத் தொழிலை தொடங்கியவுடன் அவர்களுக்கு பெரிதாக லாபம் ஒன்றும் கிடைக்கவில்லை. அதிலிருந்து தொடர்ந்து 4 வருடங்கள் கடின உழைப்போடு செயல்பட்டு வந்துள்ளார். பிறகு தான் படிப்படியாக அவர்களுடைய தொழில் கை கொடுக்கத் தொடங்கியுள்ளது.
ராஜசுதாவின் தொழில் படிப்படியாகத்தான் முன்னேற தொடங்கியுள்ளது. வாரத்திற்கு 10 லிட்டர், 20 லிட்டர் என செய்யத் தொடங்கி இன்று மாதத்திற்கு 8 டன் வரை சப்ளை செய்து வருகிறார். இவருடைய நிறுவனத்தில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மில்க் க்ரீமிலிருந்து வெண்ணெய் எடுத்து அதிலிருந்து நெய் தயாரிக்கப்படுகிறது. அங்கேயே பாட்டில்களில் அடைக்கப்பட்டு பேக்கேஜிங் செய்யப்படுகிறது.
ராஜசுதா சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கும் தற்போது நெய் சப்ளை செய்து வருகிறார். வங்கி கடன் பெற்று நான்கு வருடங்கள் படாத பாடுபட்டு இந்த தொழிலை வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டு சென்றுள்ளார். தொழில் தொடங்கி முன்னற வேண்டும் என்று நினைத்துக் கொண்டு உழைப்பவர்களுக்கு ராஜசுதா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இனி வரும் காலத்தில் பெண் தொழில் முனைவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஜெயசுதா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications