உலகளாவிய தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிசோன் (Verizon), வரலாறு காணாத மிகப்பெரிய பணிநீக்க நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இதில் சுமார் 13,000-க்கும் அதிகமான ஊழியர்கள் (மொத்த ஊழியர்களில் 13%) ஒரே நேரத்தில் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த துயர சூழலுக்கு மத்தியில், இந்நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரியான தாமி எர்வின் (Tami Erwin), லிங்க்ட்இன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான கடிதம், உலகம் முழுவதும் உள்ள பெருநிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஊழியர்களின் வலியை புரிந்துகொண்ட தலைவர் : வெரிசோனில் 35 ஆண்டுகள் உழைத்து, தலைமைச் செயல் அதிகாரி (CEO) பதவி வரை உயர்ந்தவர் தாமி எர்வின். அவர் 2022இல் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். தற்போது அவர் எழுதியுள்ள கடிதத்தில், "இந்த வாரம் வெளியான செய்தி என்னை ஆழமாக பாதித்துள்ளது. இந்த செய்திகளுக்குப் பின்னால் உள்ள மனிதர்களைப் பற்றி நான் யோசிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வேலை இழப்பவர்கள் அனுபவிக்கும் வலியை அவர் உணர்வுபூர்வமாகப் பேசியுள்ளார். "வேலை இழப்பால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், நான் ஒன்றை கூறுகிறேன். நீங்கள் துயரப்பட உங்களுக்கு அவகாசம் கொடுங்கள். ஒரு வேலை என்பது உங்களின் அடையாளம், உங்களின் உறவுகள், உங்களின் பெருமை. அதை இழப்பது மிகவும் தனிப்பட்ட விஷயமாகும்" என்று அவர் ஊழியர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
மனிதநேயம் இல்லாத மாற்றம் :வெரிசோன் நிறுவனம், போட்டியாளர்களை சமாளிக்க முடியாமல் வாடிக்கையாளர்களை இழந்து வருவதால், புதிய தலைமை செயல் அதிகாரி, அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். இந்த மாற்றங்களை சமாளிக்க, வெளியேறும் ஊழியர்களுக்கு உதவுவதற்காக 20 மில்லியன் டாலர் மறுபயிற்சி நிதியையும் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆனால், தாமி எர்வின் தனது கடிதத்தில், "தொழில்நுட்ப மாற்றம் அவசியம்தான். ஆனால், மனிதாபிமானம் இல்லாமல் செய்யப்படும் எந்த மாற்றமும் சிறந்த தலைமை பண்பு அல்ல," என்று வெளிப்படையாக சாடியுள்ளார்.
தொழில்நுட்பம் ஒரு நிறுவனத்தை மாற்றுவதில்லை. மனிதர்கள்தான் அதை செய்கிறார்கள். மாற்றம் மக்களின் வாழ்க்கையை பாதிக்கும்போது, நிறுவனத்தின் தலைவர்கள் வெறும் கணினி அமைப்புகளை மட்டும் நவீனமயமாக்க கூடாது. அவர்கள் செயல்முறைகள், தகவல் பரிமாற்றம் மற்றும் பொறுப்புக் கூறல் ஆகியவற்றையும் நவீனமயமாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், "உங்கள் வெரிசோன் அனுபவம் வீண் போகாது. அது உங்களுக்குப் பல புதிய கதவுகளைத் திறக்கும். உங்கள் தலையை நிமிர்ந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் ஏற்படுத்தப்பட்ட தாக்கத்தை யாரும் எடுத்துவிட முடியாது. உங்கள் கதை முடிவடையவில்லை. அது பரிணாமம் அடைந்து வருகிறது" என்று கூறி, அவர்கள் அடுத்த கட்ட வெற்றிக்கு தயாராக வேண்டும் என்று அந்த கடிதத்தில் வாழ்த்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications