டெல்லி: மார்ச் மாதத்தில் நாட்டின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது என மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த தரவுகளில் தெரியவந்துள்ளது. குறிப்பாக காய்கறிகள் உருளைக்கிழங்கு, வெங்காயம் ஆகியவற்றின் விலை உயர்ந்திருப்பது இந்த அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. மொத்த விற்பனை விலை பணவீக்கம் என்றால் என்ன? அது சாமானியர்களின் வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
இந்திய மக்கள் தங்கள் உணவில் அதிகமாக பயன்படுத்தக் கூடிய வெங்காயம், தக்காளி உள்ளிட்டவற்றின் விலை உயர்வது சாமானியர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வதால் பொதுமக்கள் அவற்றை வாங்கி பயன்படுத்தும் தன்மை குறைவதையே நாம் பணம் வீக்கம் என கூறுகிறோம்.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் போது மக்களின் வாங்கும் திறன் குறைந்துவிடுகிறது. உதாரணமாக ஒரு குடும்பத்தின் ஒரு மாதத்திற்கு 5 கிலோ வெங்காயம் பயன்படுத்துகிறது என வைத்துக் கொண்டால் கடந்த மாதம் அதற்கு என 200 ரூபாய் செலவிட்டிருப்பார்கள்.
ஆனால் அடுத்த மாதம் வெங்காயத்தின் விலை உயர்ந்து விடுகிறது, எனவே 200 ரூபாய்க்கு 3 கிலோ வெங்காயம் மட்டுமே வாங்க முடிகிறது.
மக்களின் வருமானமும் விலை வாசி உயர்வுக்கு ஏற்ப உயர்ந்தால் பிரச்னை இல்லை. ஆனால் இந்தியாவில் விலை வாசி உயர்வுக்கும், மக்களின் வருமான உயர்வுக்கும் பெரும் இடைவெளி நிலவுகிறது. எனவே தான் விலைவாசி உயர்வு சாதாரண மக்களை வெகுவாக பதம் பார்த்து விடுகிறது.
உணவு என்பது ஒரு அடிப்படை தேவை, அத்தகைய உணவு பொருட்களுக்கான விலை அதிகரிக்கும் போது அது நமது குடும்பங்களின் அன்றாட செலவுகளை நேரடியாக பாதிக்கிறது.
இந்தியாவில் சராசரியாக ஒரு இந்திய குடும்பத்தின் பட்ஜெட்டில் கணிசமான பகுதி உணவுக்காக ஒதுக்கப்படுகிறது. எனவே உணவுப் பொருட்களின் விலைகளில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அது அந்த குடும்பத்தின் ஒட்டுமொத்த செலவில் குறிப்பிட்ட அளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.
அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வு, மக்களின் நுகர்வு தன்மையை மாற்றுகிறது. மக்களின் வாழ்க்கை தரம், உணவு பழக்கம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சத்து குறைவான உணவினை எடுத்துக் கொள்ள வழிவகுக்கிறது.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்தால் மக்கள் தங்களின் வருவாயில் பெரும் தொகையை அதற்கென செலவழித்துவிடுவர். இதனால் சேமிப்புக்கான தொகை குறையும். இதன் காரணமாக, விலைவாசி உயர்வு சாமானிய மக்களிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஏசியன் டெவலப்மென்ட் பேங்க் வெளியிட்ட ஆய்வு முடிவில், உணவுப் பொருட்களின் விலை உயர்வு மக்களின் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என தெரிவித்தது. 63 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், உணவு பொருட்களின் விலைவாசி 1% அதிகரிக்கும் போது, குழந்தைகள் குறிப்பாக பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் 0.3% சதவிகிதம் அதிகரிக்கிறது என்றும், ஊட்டச்சத்து இல்லாதவர்கள் எண்ணிக்கை 0.5% அதிகரிக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications