சென்னை: எரிபொருள் விலை உயர்வு, தங்க நகை விலை உயர்வு போன்ற பிரச்சனைகளை எல்லாம் தாண்டி தினசரி வாழ்வில் நம்மை பாதிக்கும் மற்றொரு முக்கியமான பிரச்சனை என்னவென்றால், உணவுப் பொருட்களின் விலை உயர்வு. கடந்த சில மாதங்களாக இந்த உணவுப் பொருட்களின் விலை உயர்வு கட்டுக்கடங்காமல் இருந்து வருகிறது. இந்த விலை உயர்வு எதனால் ஏற்படுகிறது? இதற்கு என்னதான் தீர்வு? என்பதை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
இந்தியாவில் உணவுப்பொருள் பண வீக்கம், சில காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஆண்டுக்கு 8 சதவீதம் உணவுப் பொருட்களின் விலையில் ஏற்றம் ஏற்படுகிறது. இதற்கு காரணமாக பருவநிலை மாற்றங்கள் மற்றும் விவசாய விளைச்சலை பாதிக்கும் சில காரணிகள் என்று கூறப்படுகிறது.

உணவுப்பொருள் விலை ஏன் அதிகரிக்கிறது?: கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சி மற்றும் தற்போதைய வெப்ப அலை காரணமாக பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் போன்ற உணவுகளின் விநியோகம் கணிசமாக குறைந்துள்ளது. உணவுப்பொருட்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துதல் மற்றும் இறக்குமதி வரிகளை குறைப்பது போன்ற நடவடிக்கைகள் பெரிதாக பலன் தரவில்லை.
பொதுவாகவே கோடை மாதங்களில் காய்கறி விளைச்சல் வழக்கத்தை விட சற்றுக் குறைந்துவிடும். ஆனால், இந்த ஆண்டு இந்தக் குறைவு இன்னும் அதிகமாக உள்ளது. நம் நாட்டின் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட 4 முதல் 9 டிகிரி செல்சியஸ் அதிகமாக உள்ளது. இதனால் அறுவடை செய்யப்பட்ட மற்றும் சேமித்து வைக்கப்பட்ட காய்கறிகள் அதிகம் வீணாகின்றன. வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் மற்றும் கீரை போன்ற பயிர்களின் நடவும் இதனால் பாதிக்கப்படுகிறது.
விவசாயிகள் வழக்கமாக ஜூன்-செப்டம்பர் பருவ மழைக்கு முன் காய்கறி நாற்றுகளை தயார் செய்து, பின்னர் முக்கிய வயல்களுக்கு இடமாற்றம் செய்வார்கள். இருப்பினும், இந்த ஆண்டு, அதிக வெப்பம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக நாற்று நடவு மற்றும் மறு நடவு ஆகிய இரண்டிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகவே, காய்கறிகள் பற்றாக்குறை தற்போது அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் வேளாண்மை விளைச்சல் பெரிதும் சார்ந்திருக்கும் ஒரு விஷயம் என்றால் அது ஆண்டு பருவமழைதான். இந்த ஆண்டில் மழை, நாட்டின் தெற்கு பகுதியில் முன்னதாகவே தொடங்கி, மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவை அதிவேகமாக சென்றடைந்தது. ஆனால், இந்த ஆரம்ப கட்ட மழை சீக்கிரமே குறைந்துவிட்டது. இதன் விளைவாக, இதுவரை 18% மழைப்பொழிவு குறைவாகவே இருந்தது. குறைந்த பருவமழை வெப்ப அலையை உருவாக்குவது மட்டுமல்லாமல், போதுமான மழை பெய்தால்தான் முழு வீச்சில் மேற்கொள்ள முடியும் கோடைக்கால பயிர்களின் நடவையும் தாமதப்படுத்தியுள்ளது.
விலைகள் எப்போது குறையும்?: பருவமழை மீண்டும் வலுப்பெற்று வழக்கமான அளவு நாடு முழுவதும் பெய்தால், ஆகஸ்ட் மாதம் முதல் காய்கறி விலைகள் குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வெள்ளம் அல்லது நீண்ட வறட்சி ஏற்பட்டால், உற்பத்தி மீண்டும் பாதிக்கப்படலாம்.
புதன்கிழமை அரசு நெல் அரிசியின் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) 5.4% உயர்த்தியதால் அரிசி விலை அதிகரிக்கலாம். பருப்பு வகைகளான பட்டாணி, உளுந்து மற்றும் கொண்டைக்கடலை போன்றவை கடந்த ஆண்டு வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் புதிய பருவ பயிர்கள் அறுவடை செய்யப்படும் வரை விலைகளில் முன்னேற்றம் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.
அரசாங்கத்தின் தலையீடு உதவுமா?: ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது மற்றும் இறக்குமதியை தளர்த்துவது போன்ற அரசின் தலையீடுகள் சில உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க உதவும். சர்க்கரை, அரிசி, வெங்காயம் மற்றும் கோதுமை ஆகியவற்றின் ஏற்றுமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் மாநிலத் தேர்தல்கள் நெருங்கி வருகின்றன. இதனால் மத்திய அரசு விவசாயிகளின் ஆதரவைப் பெற முயற்சித்து வருகிறது. இனிவரும் காலத்தில் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications