இந்தியாவை சேர்ந்த ஏராளமான மக்களுக்கு இன்று திடீரென அதிக சத்தத்துடன் ஒரு அலர்ட் மெசேஜ் வந்திருக்கும். ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ள சூழலில் நம் போனை யாரும் என்னவோ செய்கிறார்கள் என மக்கள் அச்சமடைந்திருப்பார்கள். ஆனால் இந்த மெசேஜை அனுப்பியதே அரசு தான்.
இந்தியாவில் மழை , வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு, 'செல் பிராட்காஸ்ட் அலெர்ட்' (Cell Broadcast Alert) என்ற எச்சரிக்கை தகவல்களை அனுப்பும் அமைப்பை உருவாக்கி இருக்கிறது. அதற்கான சோதனை ஓட்டம் தான் இது. அதாவது ஒரே கிளிக்கில் கோடிக்கனக்கான மக்களுக்கு அலர்ட் செய்வது தான் இதன் நோக்கம். அதற்கான சோதனை மெசேஜ் அனுப்பும் பணி இன்று தொடங்கியுள்ளது. எனவே மக்கள் இதனை கண்டு அச்சப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை இணைந்து இந்த முக்கியமான சோதனையை நடத்துகின்றன. 'செல் பிராட்காஸ்டிங்' (Cell Broadcast) எனப்படும் சிறப்புத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இது செயல்ப்படுத்தப்படுகிறது. பொதுவாக மழை வெள்ளம், புயல் காலங்களில் பேரிடர் மேலாண்மை அமைப்புகளில் இருந்து நமக்கு எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கை அனுப்பி வைக்கப்படும்.
ஆனால், இந்தத் தொழில்நுட்பம் ஒரு குறிப்பிட்ட செல்போன் கோபுரத்தின் (Tower) எல்லைக்குள் இருக்கும் அனைத்து போன்களுக்கும் ஒரே நேரத்தில் தகவலை அனுப்பும் திறன் கொண்டது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த எச்சரிக்கை வரும்போது செல்போன் 'சைலண்ட்' (Silent) பயன்முறையில் இருந்தாலும், உரத்த அபாய ஒலியுடன் திரையில் செய்தியை காட்டும்.
எனவே ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவர்கள் அல்லது கவனக்குறைவாக இருப்பவர்கள் கூட உடனடியாக விழிப்புணர்வு பெற முடியும். இதன்படி குறிப்பிட்ட நேரத்தில் நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான செல்போன்களுக்கு இந்த எச்சரிக்கை செய்தி இன்று அனுப்பப்பட இருக்கிறது. அந்தச் செய்தியில், இது ஒரு மாதிரி சோதனை (Sample Testing) மட்டுமே என்றும், பொதுமக்கள் இது குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.
மேலும், மக்கள் இதனை கண்டு பயப்பட வேண்டாம், 'புறக்கணிக்கவும்' (Ignore) என்ற பட்டனை அழுத்தினால் போதுமானது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசரக்கால அமைப்பின் செயல்திறனை சோதிக்கவும், அதில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளைக் கண்டறிந்து சரிசெய்யவும் இந்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய தொலைத்தொடர்பு மேம்பாட்டு மையம் உருவாக்கியுள்ள, 'சசேத் (SACHET)' என்ற ஒருங்கிணைந்த எச்சரிக்கை தகவல் அமைப்பு மூலம் இந்த செய்திகள் வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த தொழில்நுட்பம் இந்திய அரசாங்கத்தின் டிஜிட்டல் பாதுகாப்புத் திட்டத்தில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இன்று மட்டுமில்லாமல் சில நாட்களுக்கு இது போன்ற அலர்ட்டுகள் வரும் என்பதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. இதில் ஆங்கிலம் மட்டுமில்லாமல் ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளிலும் இது ஒரு சோதனை ஓட்டம், என்ற தகவல் காட்டும்.


Click it and Unblock the Notifications

