புனே: பணிச்சுமை காரணமாக 26 வயது இளம்பெண் உயிரிழந்த செய்தி பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. இந்த நிலையில் அந்த இளம் பெண் பணியாற்றிய நிறுவனத்தின் தலைவர் அனைத்து ஊழியர்களுக்கும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த அன்னா செபாஸ்டின் என்ற 26 வயதான பட்டய கணக்காளர் நான்கு மாதங்களுக்கு முன்பு புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படக்கூடிய எர்னெஸ் அண்ட் யங் (Ernst & Young EY) என்ற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இந்த நிறுவனம் இந்தியாவில் செயல்படக்கூடிய மிகப்பெரிய நான்காவது அக்கவுண்டிங் நிறுவனம் ஆகும். நான்கு மாதங்களாக இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த அன்னா செபாஸ்டியனுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட்டதாக தெரிகிறது.

அதிக வேலை வழங்கப்பட்டதால் அவர் மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் அதுவே அவரது இறப்புக்கு காரணம் என்றும் அவரது தாயார் அனிதா குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக அன்னா செபாஸ்டியனின் தாயார் அனிதா நிறுவன தலைமை செயல் அதிகாரியான ராஜுவ் மேமானிக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் தன்னுடைய மகனின் இறப்புக்கு இந்த நிறுவனமே காரணம் என்றும், இவர்கள் வழங்கிய பணிச்சுமையை காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதனிடையே எர்னெஸ் அண்ட் யங் (Ernst & Young EY) இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ராஜுவ் மேமானி ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த கடிதம் பெயர் வெளியிடப்படாத ஒரு பயனரால் ரெடிட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் "ஒரு உயிரிழப்புக்கு எதை கொடுத்தாலும் நம்மால் ஈடு செய்ய முடியாது என்பதை நாங்கள் உணர்கிறோம். இப்படிப்பட்ட ஒரு தருணத்தில் அவரின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நிறுவனம் தயாராக இருக்கிறது" என கூறியுள்ளார்.
மேலும் நமது நிறுவனத்தில் ஊழியர்களின் மனநலனுக்கும் உடல் நலனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை அனைவரும் உணர வேண்டும் என தெரிவித்துள்ளார். ஊழியர்களுக்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் வழங்குவதற்கு நிறுவனம் தயாராக இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறேன் என தெரிவித்துள்ள அவர் ஊழியர்களுக்கு சாதகமான பணிச்சூழல் கொண்ட நிறுவனமாக எர்னெஸ் அண்ட் யங் (Ernst & Young EY) இந்தியா நிறுவனம் தொடர்ந்து செயல்படும் எனக் கூறியுள்ளார்.
ஊழியர்கள் தாங்கள் பேச வேண்டும் என நினைப்பதை தைரியமாக தங்கள் மேலாளர்களிடம் பேசலாம் என்றும் நிறுவன செயல்பாடுகளில் ஏதேனும் மாற்றம் கொண்டுவர வேண்டும் என நினைத்தால் அவற்றை ஊழியர்கள் தைரியமாக பரிந்துரைக்கலாம் என்றும் கூறியுள்ளார். ஊழியர்கள் தங்களுடைய பிரச்சனைகளை எந்த தயக்கமும் இன்றி வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications