தேசிய பங்குச்சந்தை அமைப்பின் முன்னாள் தலைவரான சித்ரா ராமகிருஷ்ணா 20 வருடமாக ஒரு முகம் தெரியாத சாமியார் 'சிரோன்மணி' உடன் பல்வேறு ரகசிய தரவுகளைப் பகிர்ந்தது மட்டும் அல்லாமல், பல முக்கிய நிர்வாக முடிவுகளையும் இந்தச் சாமியார் உத்தரவின் படி செய்துள்ளார்.
இதுமட்டும் அல்லாமல் தனது பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்து பல ஊழியர்களை இடம் மாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு அளித்துப் பல அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இந்நிலையில் சித்ரா ராமகிருஷ்ணா-வை கட்டுப்படுத்திய அந்த முகம் தெரியாத சாமியார் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சித்ரா ராமகிருஷ்ணா - சிரோன்மணி
சித்ரா ராமகிருஷ்ணா செய்த மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வரும் நிலையில், சித்ரா ராமகிருஷ்ணா-வுக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் எனப் பல இடத்தில் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தியா முழுவதும் அனைவருக்கும் இருக்கும் முக்கியமான கேள்வி யார் இந்த இமயமலை சாமியாரான சிரோன்மணி என்பது தான்.
190 பக்கம் அறிக்கை
சித்ரா ராமகிருஷ்ணா உடன் செய்த விசாரணையில் சுமார் 190 பக்கம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த விசாரணையில் சித்ரா ராமகிருஷ்ணா, சிரோன்மணி என்ன சொன்னார், அதை எப்படிச் செய்தார், சிரோன்மணி உடனான தொடர்பு குறித்து முழுமையாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனந்த் சுப்ரமணியன்
மேலும் இந்த 190 பக்க அறிக்கையின் படி NSE மற்றும் EY கொடுத்துள்ள பாரின்சிக் அறிக்கையில் சித்ரா ராமகிருஷ்ணா, என்எஸ்ஈ அமைப்பில் சிஓஓ-வாக நியமித்த ஆனந்த் சுப்ரமணியன் தான் இந்த முகம் தெரியாத இமயமலை சாமியாரான சிரோன்மணி அழுத்தமாகக் குறிப்பிட்டு உள்ளது.
பழைய ஊழியர்கள்
இதேவேளையில் சித்ரா ராமகிருஷ்ணா உடன் நீண்ட காலமாகப் பணியாற்றிப் பழைய ஊழியர்களும், அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்களும், என்எஸ்ஈ துவங்கிய ஆரம்பக்கட்டத்தில் இருந்து சித்ரா உடன் பணியாற்றியவர்கள் பலரும் கூறியது சென்னை சாமியார் பெயர் தான்.
சென்னை பயணம்
சித்ரா தனது குருவாகவும், ஆன்மீக வழிகாட்டியாகவும் சென்னையைச் சேர்ந்த முருகடிமால் செந்தில் சுவாமிகள் என்ற பெயரில் ஒருவர் இருந்ததாகவும், அவரைச் சித்ரா பெரிய அளவில் நம்புவதாகவும் தெரிகிறது. மேலும் சித்ரா சென்னை செல்லும் போதெல்லாம் சாமியாரைச் சந்தித்து விட்டுப் பிராசாதம் கொண்டு வருவார் என்றும் கூறியுள்ளனர்.
முருகடிமால் செந்தில் சுவாமிகள்
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் சில ஆண்டுகளுக்கு முன்பே முருகடிமால் செந்தில் சுவாமிகள் மறைந்துவிட்டார். இந்தச் சாமியார் இந்தப் பிரச்சனைக்குக் காரணமாக ஆனந்த் சுப்ரமணியன்-க்கு நெருங்கிய தொடர்புடையவர் அல்லது உறவுக்காரர் ஆகவும் உள்ளார் என்பது தான் டிவிஸ்ட்.
ஈமெயில் முகவரி
செபியின் விசாரணை அறிக்கையின் படி வெளியில் இருந்து ஒருவர் சித்ரா ராமகிருஷ்ணா-வுக்கு rigyajursama@outlook.com என்ற ஈமெயில் முகவரியில் இருந்து என்எஸ்ஈ-யில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய உத்தரவிட்டு வந்ததாகத் தெரிவித்துள்ளது. சென்னை சாமியார் இறந்துவிட்ட நிலையில் அவருடைய முகவரியில் யார் ஈமெயில் அனுப்புகிறார்கள் என்பது தெரியவில்லை.
பாஸ்வேர்டு திருட்டு
மேலும் இந்த மின்னஞ்சல் முகவரிக்கான பாஸ்வேர்டு திருடப்பட்டு இருந்தால், அந்த முகவரியில் இருந்து அனுப்பும் நபரின் உத்தரவுகளைத் தனது குரு தான் அனுப்புகிறார் எனச் சித்ரா நம்பி அனைத்து தகவல்களையும் பகிர்ந்தும், உத்தரவுகளை அப்படியே செயல்படுத்தி வந்துள்ளார் எனவும் இந்த அறிக்கை குறித்தும், விசாரணை குறித்தும் அறிந்த சிலர் தெரிவித்துள்ளனர்.
ஆனந்த் சுப்ரமணியன் வேலை
இதோடு NSE மற்றும் EY கொடுத்துள்ள பாரின்சிக் அறிக்கையில் ஆனந்த் சுப்ரமணியனின் என்எஸ்ஈ கம்பியூட்டரில் "anand.subramanian9" மற்றும் "sironmani.10" என்ற இரு ஸ்கைப் ஐடி இருந்துள்ளதாகவும், இந்த ஸ்கைப் முகவரி rigyajursama@outlook.com மற்றும் ஆனந்த் சுப்ரமணியனின் மொபைல் எண் உடன் இணைக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது.
உண்மை என்ன..?!
மேலும் rigyajursama@outlook.com ஐடியில் இருந்து அனுப்பப்பட்ட சில ஈமெயிலில் நில பத்திரங்களின் டிஜிட்டல் படிவம் இருந்ததாகவும், கூறும் NSE - EY பாரின்சிக் அறிக்கையில் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கும் முகம் தெரியாத சாமியாரான சிரோன்மணி என்பவர் ஆனந்த் சுப்ரமணியன் ஆக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆனால் சித்ரா இதை முழுமையாக மறுத்தும் உள்ளார்.


Click it and Unblock the Notifications