சத்தீஸ்கர்: பண பரிமாற்றங்களில் மோசடி ,போலி ஆவணங்களை வழங்கி மோசடி என பல்வேறு வங்கி சார்ந்த மோசடிகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் போலியாக ஒரு வங்கியை நடத்தி இலட்சக்கணக்கான பணம் மோசடி செய்யப்பட்டு இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் கிளை என போலியாக ஒரு வங்கி கிளை நடத்தி ஏராளமானவர்களின் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சக்தி மாவட்டம்.

இந்த மாவட்டத்தின் சப்போரா என்ற கிராமத்தில் தான் போலியாக எஸ்பிஐ வங்கி கிளை செயல்பட்டு இருக்கிறது. எஸ்பிஐ வங்கி அலுவலகத்தை சப்போரா கிராமத்தில் நிறுவ இருப்பதாகவும் இதற்காக ஆட்களை வேலைக்கு தேர்வு செய்வதாகவும் ஆறு பேர் கொண்ட கும்பல் விளம்பரம் செய்துள்ளது.
பத்து நாட்களுக்கு முன்பு இந்த போலி வங்கிகளையானது திறக்கப்பட்டிருக்கிறது. ஒரு உண்மையான வங்கியை போலவே அனைவரும் நம்பும்படி அங்கே செட்டப் செய்துள்ளனர். புதிதாக டேபிள்கள், சேர்கள், ஆவணங்கள் வங்கி கவுன்ட்டர்கள், மேலாளருக்கான அறை என பார்ப்பதற்கு உண்மையாகவே எஸ்பிஐ வங்கியை போலவே இருந்ததால் மக்களும் அதை நம்பி வங்கிக்கு சென்று கணக்குகளை தொடங்கியுள்ளனர். அது மட்டும் இன்றி அந்த ஆறு பேரில் ஒருவர் வங்கி மேலாளர் போல நடித்து அந்த கிராமத்தை சேர்ந்தவர்களை புதிதாக வேலைக்கும் நியமனம் செய்துள்ளனர்.

வேலைக்கு நேர்காணல் நடத்தி அவர்களுக்கு வங்கி வேலை நல்ல சம்பளம் கிடைக்கும் என நம்பிக்கை அளித்து லட்சக்கணக்கனில் பணம் வாங்கியுள்ளனர். வேலை நிரந்தரமாக வேண்டுமெனில் பணம் வழங்க வேண்டும் என கூறி பெற்றுள்ளனர். இதனிடையே அந்த கிராமத்திற்கு அருகில் உள்ள மற்றொரு எஸ்பிஐ வங்கி கிளையின் மேலாளருக்கு இந்த வங்கி குறித்து சந்தேகம் எழுந்த நிலையில் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையினர் வந்து கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி அந்த கிளையில் ஆய்வு நடத்தினர். அப்போது தான் அது ஒரு போலியான வங்கி என்றும் அதிலிருந்து ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்றும் கண்டறியப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புதிதாக வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து அவர்களுக்கு வங்கி பணியாளர்களுக்கான அனைத்து பயிற்சிகளையும் இவர்கள் வழங்கியுள்ளனர்.

மேலும் வேலையை நிரந்தரம் செய்து தருவதாக கூறி 2 லட்சம் ரூபாய் முதல் 6 லட்சம் ரூபாய் வரை பணமும் வாங்கியுள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வங்கி வேலை கிடைத்துவிட்டது என மகிழ்ச்சியில் இருந்தவர்கள் எல்லாம் தற்போது ஏமாற்றமடைந்துள்ளனர் அதுமட்டுமின்றி பணத்தையும் இழந்துள்ளனர்.
கிராம மக்களோ வங்கி என நினைத்து கணக்குகளை தொடங்க பணம் செலுத்தி தற்போது செய்வது அறியாமல் திகைத்து நின்றனர். காவல்துறையினர் இந்த போலி வங்கி கிளை மோசடி கும்பல் நெட்வொர்காக செயல்படுகின்றனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Written by: Devika


Click it and Unblock the Notifications