காலைல விடிஞ்சதும் பேப்பரை பார்த்தாலோ அல்லது டீவியை ஆன்செய்து செய்திகளை பார்த்தாலோ தெரிந்து கொள்ளும் விதவிதமான மோசடிகள் பொதுமக்களை வியர்க்க வைத்து விடுகிறது.
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் விதவிதமாக ரகரகமாக மோசடிகளை பார்க்க நேரிடும்போது அதிர்ச்சியடைய வைக்கிறது. உண்மையிலேயே ரூம்போட்டு தான் இப்டிலாம் பிளான் பண்றானுங்க போல!

நாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மத்திய அரசு சுங்கச் சாவடிகளை அமைத்து சுங்க வரியை வாகனங்களிடமிருந்து வசூலித்து வருகிறது. இந்தச் சுங்கச் சாவடிகள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டு அவர்கள்தான் ஆட்களை வேலைக்கு வைத்து வரியை வசூல் செய்கின்றனர்.
ஒருநாளைக்கு நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் சுங்க வரியாக வசூல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் குஜராத் மாநிலம் பாமன்போர்- கட்ச் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு டோல் கேட் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்துள்ளது.
குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் ஒரு தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் இந்த டோல் பிளாசா அமைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையை பைபாஸ் செய்து இதை அமைத்துள்ளனர். இந்த டோல் பிளாசாவில் 50 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலித்துள்ளனர்.
இதைக் கடந்து சென்ற பொதுமக்கள், வியாபாரிகள், போக்குவரத்து நிறுவன பேருந்துகள், தனியார் பேருந்துகள், அரசு வாகனங்கள் மட்டுமல்ல. காவல்துறை வாகனங்களிடமும் இங்கு சுங்க வரி வசூலிக்கப்பட்டு வந்துள்ளது.
இதுபற்றி மோர்பி மாவட்ட ஆட்சியர் ஜிடி பாண்டியா கூறுகையில், வர்காஸியா டோல் பிளாசா வழியில் சரியான தடத்தில் இருந்து வாகனங்களை வேறொரு சாலைக்கு திருப்பிவிடுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அப்படிச் செல்லும் வாகனங்களிடம் சுங்க வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போலீஸாருடன் அங்கு சோதனையிட்டபோது உண்மை தெரியவந்தது. அதன்பேரில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதுபற்றி அங்கீகாரம் உள்ள ஒரிஜினல் டோல் பிளாசா மேனேஜர் கூறுகையில் சுற்றியுள்ள நிலக்கிழார்கள் இதுபோல வாகன ஓட்டிகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஏமாற்றி சுங்க வரி வசூலித்து வந்தனர் என்றார்.
ஆனால் ஒரிஜினல் ரூட்டை விட இந்த ரூட்டில் சென்றால் பாதி கட்டணம் என்று ஆசை காட்டியதால் தான் வாகன ஓட்டிகள் வந்தனர் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இந்த போலி டோல் பிளாசாவை அங்கிருந்த ஒயிட் ஹவுஸ் செராமிக் கம்பெனிக்கு சொந்தமான நிலத்தில் சாலை வசதியுடன் அமைக்கப்பட்டிருந்தது.
ஒயிட் ஹவுஸ் செராமிக் தொழிற்சாலை உரிமையாளர் அமர்ஷி படேல் மற்றும் வனராஜ் சிங் ஜாலா, ஹர்விஜய் சிங் ஜாலா, தர்மேந்திர சிங் ஜாலா, யுவராஜ் சிங் ஜாலா மற்றும் பலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் சுமார் மூன்று ஆண்டுகளாக போலி அரசு அலுவலகத்தை நிறுவி 4 கோடி ரூபாய்க்கு மேல் அரசு நிதியை மோசடி செய்ததற்காக ஒரு நபர் கைது செய்யப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு போலி டோல் பிளாசா சம்பவம் நடந்துள்ளது.


Click it and Unblock the Notifications