இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன விற்பனை மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் அறிக்கையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் அதிகம் எதிர்பார்க்கும் FAME III திட்டத்தை மத்திய அரசு வெளியிடும் என தெரிகிறது. ஆனால் இந்த முறை கடுமையான விதிமுறைகள் உடன் பெரும் அபராத தொகையுடன் இருக்கும்.
FAME III திட்டம் மூலம் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆகிய அனைத்து வகையான எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் மானியத்தை மக்களுக்கும், வரிச் சலுகையை உற்பத்தியாளர்களுக்கும் வழங்கப்படும்.

FAME III திட்டத்திற்காக சுமார் ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதோடு கடுமையான விதிமுறைகளும், அபராதமும் விதிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக மாற உள்ளது.
மத்திய அரசின் FAME 3 திட்டத்தில் விண்ணப்பிக்கும் நிறுவனங்கள், உள்ளூர் உற்பத்தி விதிமுறைகளை கடைப்பிடிக்கத் தவறினால், பெரும் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதாவது FAME 3 திட்டத்தின் கீழ் மானியத்திற்கு விண்ணப்பிக்கும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்கள், வருடத்திற்கு இரண்டு முறை தொழில்நுட்ப மற்றும் வணிக ஆய்வுக்கு (techno-commercial audit) உட்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம், அவை உள்ளூர்மயமாக்கல் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகின்றனவா என்பது உறுதி செய்யப்படும். உள்ளூர்மயமாக்கல் என்பது இந்த வாகன தயாரிப்பில் குறிப்பிட்ட சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.
FAME 3 திட்ட விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள், பெற்றுக்கொண்ட மானியத்தைத் திருப்பி செலுத்த வேண்டும். மேலும், அபராதமாக, MCLR விகிதத்தை விட 3% அதிக வட்டி உடன் இத்தொகையைத் திருப்பி செலுத்த வேண்டியிருக்கும் என்று அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டில் மத்திய அரசு FAME திட்டத்தைத் தொடங்கியதில் இருந்து, எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் உள்ளூர்மயமாக்கல் அளவீட்டைப் பூர்த்தி செய்யாவிட்டால் அபராதம் விதிக்கப்படுவது இதுவே முதல் முறை.
FAME திட்டத்தின் முந்தைய பதிப்புகளில், எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் படிப்படியாக உள்ளூர்மயமாக்கல் பங்கை அதிகரிப்பதற்கான கட்டமைக்கப்பட்ட உற்பத்தி திட்டத்தை (Phased Manufacturing Programme - PMP) அமல்படுத்தப்பட்டன. இதனால் FAME 3 திட்டம் உள்ளூர்மயமாக்கல் விதிமுறையைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த மானியம் செல்ல வேண்டும் என்ற இலக்குடன் உருவாக்கப்பட்டு உள்ளது.
₹10,000 கோடி ரூபாய் மதிப்பிலான FAME 2 திட்டத்தைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட சர்ச்சைகளை மீண்டும் தடுப்பதற்காகவும் அபராதம் விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஹீரோ எலக்ட்ரிக் மற்றும் ஒகினாவா ஆட்டோடெக் உட்பட சில நிறுவனங்கள் உள்ளூர்மயமாக்கல் விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாமல் மானியத்தைத் தவறாகப் பெற்றதாகக் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications