மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தங்களுடைய ஓய்வுக் காலத்தை சுயமரியாதையோடு கழிக்க வேண்டும் என்று எண்ணுவதுண்டு. இதற்கு பக்கபலமாக இருப்பது, ஒருவர் தங்கள் பணியில் இருக்கும் போதே செய்யக்கூடிய சேமிப்பு. சிலர் பென்ஷன் திட்டங்களிலும் சேமித்து வைத்திருப்பார்கள். பணிக்கு போகாமல் இருக்கும் சமயத்தில் இதுபோன்ற சேமிப்பே பொருளாதார ரீதியாக அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும். ஓய்வுக் காலத்தை கழிக்க பென்ஷன் உறுதுணையாக இருக்கிறது சரி.. ஓய்வு பெறுபவர் துரதிஷ்டவசமாக இறந்து விட்டால் அவருக்கு பின் அவருடைய குடும்பத்தின் நிலை என்னவாகும்?, பென்ஷன் மனைவிக்கு கிடைக்குமா? அல்லது பிள்ளைகளுக்கு கிடைக்குமா? ஒரு வேலை இரண்டு மனைவிகள் இருந்தால் யாருக்கு பென்ஷன் சேரும்? என்ற பல கேள்விகள் உங்களுக்கு இருக்கும். இது போன்ற கேள்விகளுக்கு இந்தப் பதிவில் பதிலைப் பாப்போம்.
ஒரு ஓய்வு பெறும் நபர் இறந்த பிறகு, அவருடைய குடும்பத்தின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு சில விதிகளை வகுத்துள்ளது. அதைத்தான் குடும்ப ஓய்வூதியம் என்று சொல்கிறோம். இதை ஆங்கிலத்தில் "ஃபேமிலி பென்ஷன்" என்று கூறுவார்கள். பொதுவாக ஓய்வூதியம் பெறும் கணவர் இறந்து விட்டால் இந்த பென்ஷன் தொகை அவருடைய மனைவிக்கு வழங்கப்படும். அதற்கு கணவர், இறப்பதற்கு முன்பே அவருடைய நாமினி லிஸ்டில் மனைவி பெயரை சேர்த்திருக்க வேண்டும். ஒருவேளை கணவர் 60 வயதைக் கடந்து மரணம் அடைந்தால், அவருடைய பென்ஷன் தொகையில் 50 சதவீதம் மனைவிக்கு கிடைக்கும். ஓய்வூதியம் பெறும் கணவர் 60 வயதுக்கு முன்பாகவே இறந்து விட்டால், அவரின் முழு பென்ஷன் தொகையும் அவருடைய மனைவிக்கு கிடைக்கும்.
நம் நாட்டில் இன்னமும் சில குடும்பங்களில் இரண்டு மனைவிகள் இருக்கும் வழக்கம் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சூழலில் யாருக்கு பென்ஷன் கிடைக்கும் தெரியுமா? அரசு விதிகளின்படி ஓய்வு பெற்று, இறந்த நபர் சட்டப்படி திருமணம் செய்த அவருடைய முதல் மனைவிக்கு பென்ஷன் கிடைக்கும். ஆனால் அதற்கும், இறந்தவர் தன்னுடைய மனைவியின் பெயரை நாமினி லிஸ்டில் கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும். முதல் மனைவி உயிரோடு இருந்து, அவரே சட்டபூர்வமான மனைவி எனும் பட்சத்தில் பென்ஷன் தொகை அவருக்கு மட்டும் தான் சொந்தம்.

ஒருவேளை முதல் மனைவி இறந்துவிட்டால் இரண்டாவது மனைவிக்கு பென்ஷன் கிடைக்கும். அதற்கு அவர்களுடைய திருமணம் சட்டப்படி செல்லுபடி ஆகக்கூடியதாக இருக்க வேண்டும். மேலும் இறப்பதற்கு முன்பு ஓய்வு பெறும் நபர் தன்னுடைய இரண்டாவது மனைவியின் பெயரை நாமினி லிஸ்டில் வைத்திருக்க வேண்டும்.
அதுவே ஓய்வு பெற்ற நபர் இறப்பதற்கு முன்பே, அவருடைய மனைவி இறந்து விட்டால் பிள்ளைகளுக்கு பென்ஷன் வழங்கப்படும். ஒரு பிள்ளையாக இருக்கும் பட்சத்தில் முழு பென்ஷன் தொகையும் கொடுக்கப்படும். அதுவே 2 பிள்ளைகள் இருந்தால் பிரித்து பிரித்து வழங்கப்படும். அதற்கு பிள்ளைகள் கண்டிப்பாக 25 வயதை கடந்திருக்க வேண்டும். ஓய்வு பெற்றவரின் பிள்ளைகளுக்கு ஏதேனும் உடல் ரீதியான அல்லது மனரீதியான குறைபாடுகள் இருந்தால் அவர்கள் தங்களுடைய வாழ்நாள் முழுவதும் 75% வரையிலான பென்ஷனைப் பெறுவார்கள்.
பென்ஷன் பெறுவதில் நாமினிக்கு எவ்வளவு பெரிய பங்கு இருக்கிறது என்பதை பார்த்தீர்களா? ஒரு சிலர் பணியில் சேரும்போது நிறுவனம் கேட்பதற்கு இணங்க நாமினியை கொடுத்திருப்பார்கள். அதன்பிறகு அவர்களுடைய விவரங்களை அப்படியே மறந்திருப்பார்கள். உதாரணமாக தங்களுடைய பணிக்களத்திலேயே சிலருக்கு திருமணம் நடக்கலாம், விவாகரத்து நடக்கலாம் அல்லது மனைவி மரணமடையலாம்.. இது போன்ற சூழலில் கண்டிப்பாக நாமினியின் பெயரை மாற்ற வேண்டும். ஓய்வு காலம் என்பது உங்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. உங்களுக்கு பிறகு உங்களுடைய குடும்பத்தினர் எந்தவித சிக்கலையும் அனுபவிக்கக் கூடாது என்றால் அதற்கு முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம்.


Click it and Unblock the Notifications