இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகி இருக்கிறது. கூடிய விரைவில் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட உள்ளது. ஆனால் இந்த வர்த்தக ஒப்பந்தத்திற்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயிகளுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும் என விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்திய வணிகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் பதவி விலக வலியுறுத்தி இருக்கும் வேளாண் அமைப்புகள் இந்த ஒப்பந்தத்தை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இடக்கூடாது என்றும் விவசாய அமைப்புகள் கோரிக்கை வைத்திருக்கின்றன. இது தொடர்பாக சம்யுக்த் கிசான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில் இந்தியா அமெரிக்கா இடையிலான இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்திய விவசாயத்தை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு முழுமையாக சரணடைய வைத்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.
இந்திய அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை கண்டித்து வரும் 12ஆம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் மற்றும் வேலை நிறுத்தங்கள் நடைபெறும் என அந்த அமைப்பு கூறி இருக்கிறது. அமெரிக்காவின் ஆப்பிள் மற்றும் பருத்தி பொருட்களை இந்திய சந்தையில் அனுமதிப்பதன் ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விலங்குகளுக்கான தீவனங்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தால் இந்தியாவின் தீவன சந்தை முழுவதுமாக அமெரிக்க நிறுவனங்கள் வசம் சென்றுவிடும் என கூறி இருக்கிறது. தங்களுடைய நாடு தழுவிய போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறது. பால் மற்றும் வேளாண் பொருட்களுக்கு வர்த்தக ஒப்பந்தங்களில் இருந்து விலக்கு தந்திருக்கிறோம் என கூறி வருகிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். ஆனால் அது உண்மை கிடையாது என கூறியிருக்கும் வேளாண் அமைப்பின் தலைவர் ராகேஷ் டிகாயத், பிரிட்டன், நியூஸ்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஆன வர்த்தக ஒப்பந்தத்தில் பால் மற்றும் வேளாண் பொருட்களும் இடம்பெற்றுள்ளன, நாட்டின் விவசாயிகள் அனைவரையுமே பியுஷ் கோயல் ஏமாற்றி இருக்கிறார் என கூறியுள்ளனர்.
அமைச்சர் பியூஷ் கோயல் உடனடியாக பதவி விலக வேண்டும், பிரதமர் நரேந்திர மோடி இந்திய அமெரிக்க இடைகால வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்து இடக்கூடாது இது நடந்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடக்கும் என இந்த அமைப்பின் தலைவர்கள் அறிவித்துள்ளனர். அமெரிக்காவில் விற்பனையாக கூடிய விலங்குகளுக்கான தீவனங்களில் இறைச்சி கலந்த பொருட்கள் இடம் பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது என கூறும் எஸ்கேஎம் அமைப்பின் தலைவர் நம் ஊரில் இருக்கக்கூடிய பசுக்களுக்கு அமெரிக்காவில் இருந்து மாமிசம் கலந்த தீவனத்தை இறக்குமதி செய்து வழங்குவதா என கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications