இன்று இந்தியாவில் இண்டர்நெட் இல்லாமல் எந்த ஒரு துறையும் இயங்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் இந்தியாவுக்கு இன்டர்நெட்டை அறிமுகப்படுத்திய இந்தியாவின் இண்டர்நெட் தந்தை என்று போற்றப்படும் பிகே சிங்கால் நேற்று காலமானார்.
அவரது மறைவிற்கு தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய இணையத்தின் தந்தை
இந்திய இணையத்தின் தந்தை என்று அங்கீகரிக்கப்பட்ட பிகே சிங்கால், விஎஸ்என்எல் தலைவராக பொறுப்பேற்ற போது அந்த பொறுப்பு மிகப்பெரிய சவால் நிறைந்தது என்பதை அறிந்துகொண்டார். இருப்பினும் அவர் தீவிர முயற்சி செய்து அந்த நிறுவனத்தை முன்னேற்றுவதற்கு பாடுபட்டார்.
விஎஸ்என்எல் நிறுவனம்
1991 ஆம் ஆண்டு 125 மில்லியன் டாலர் என்ற மதிப்புள்ள விஎஸ்என்எல் நிறுவனத்தை 1998ஆம் ஆண்டு 1.65 பில்லியன் டாலர் நிறுவனமாக வளர்ச்சி அடைய செய்தது அவரது மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
பாகிஸ்தான்
பாகிஸ்தானில் உள்ள லாகூரில் பிறந்த பிகே சிங்கால் அங்கேயே பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். அதன்பிறகு 1947ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர் அவர் டெல்லியில் குடியேறினார். டெல்லியில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவர் கான்பூர் ஐஐடியில் மின் பொறியியல் படிப்பை தொடர்ந்தார்.
லண்டன் நிறுவனம்
அதன் பிறகு லண்டனில் உள்ள சில நிறுவனங்களின் பணிபுரிந்த பிகே சிங்கால், லண்டனில் மிகப்பெரிய புகழ்பெற்ற இன்மார்சாட் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஆனால் திடீரென அந்த நிறுவனத்தில் உள்ள வேலையை உதறிவிட்டு அவர் இந்தியா திரும்பியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
வி.எஸ்.என்.எல் தலைவர்
விஎஸ்என்எல் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றதுதான் அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பமாக இருந்தது. அந்த வேலை மிகப்பெரிய சவால் நிறைந்தது என்று அவர் கருதி கொண்டாலும் அந்த வேலை அவருக்கு மிகவும் பிடித்தமான வேலை என்று தனது நினைவுக் குறிப்பில் எழுதி உள்ளார்.
இந்தியாவில் இணையம்
1995ஆம் ஆண்டு முதல் முதலாக இந்தியாவுக்கு இன்டர்நெட்டை கொண்டுவர அவருக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. அதுவரை அடிப்படை இண்டர்நெட் மட்டுமே இந்தியாவில் இருந்தது என்பதும் அது கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல் தோல்வி
இந்த நிலையில் இந்தியாவில் இன்டர்நெட் பெறுவதற்கான முயற்சிகள் செய்த அவர் முதல் முயற்சியில் படுதோல்விக்கு ஆளானார். அந்த சமயம் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது நான் பல நாட்களை இதில் வீணடித்து விட்டேன் என்று விரக்தியுடன் பேசினார். ஆனால் அதே நேரத்தில் அந்த தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்வதற்காக ஒரு குழுவை அமைத்தார். அந்த குழு இரவு பகலாக பணி செய்தது என்பதும் அந்த குழுவை அவரே நேரடியாக ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இணையம் அறிமுகம்
இறுதியில் அவர் இந்தியாவுக்கு இன்டர்நெட் வழங்கும் தொழில்நுட்பத்தில் வெற்றி கண்டார். முதன்முதலாக இந்தியாவுக்கு இன்டர்நெட்டை அறிமுகப்படுத்தியதால் அவர் இந்தியாவின் இணைய தந்தை என்று போற்றப்படுகிறார். இன்று அனைத்து நிறுவனங்களிலும், ஊடகங்களிலும், செய்தி நிறுவனங்களிலும், தொலைக்காட்சிகளிலும் இன்டர்நெட் பயன்படுத்துவதற்கு மூலகாரணமாக இருந்தவர் என்பதால் அவர் இந்திய இணையத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
தற்போதைய தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை அமைச்சரான ராஜீவ் சந்திரசேகர் அவர்கள் தனது டுவிட்டரில் 'இந்தியாவின் அசல் தொலைத்தொடர்பு முன்னோடி பிகே சிங்கால்' என்று புகழாரம் சூட்டியுள்ளார். அதேபோல் அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் பாலாஜி கிருஷ்ணசாமி அவர்கள் தனது டுவிட்டரில் 'சிங்கால் கூறும் அறிவுரையை தவறாமல் கடைபிடித்தால் எப்போதும் வெற்றி கரமாக இருக்கும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளர்
மனோஜ் கைரோலா என்ற மூத்த பத்திரிகையாளர் தனது டுவிட்டரில், 'நான் ஐஐடியில் படித்து விட்டு வெளியே வந்த போது வெறும் பாடபுத்தக அறிவு மட்டுமே இருந்தது என்றும் சிங்கால் தான் தனது உண்மையான தொலைத்தொடர்பு அறிவைக் கற்றுக் கொடுத்தார் என்றும் வணிக நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தார் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications