இந்தியாவில் அசைக்க முடியாத தொழில் குழுமமாக டாடா குழும நிறுவனங்கள் இருந்து வருகின்றன. தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனமாக டிசிஎஸ் என்று அழைக்கப்படும் டாடா குழுமத்திற்கு சொந்தமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் இருந்து வருகிறது.
டாடா குழுமத்தில் வெற்றிகரமாக செயல்படும் மற்றும் லாபத்துடன் செயல்படும் நிறுவனமாக டிசிஎஸ் இருக்கிறது. இந்த டிசிஎஸ் நிறுவனத்திற்கு வித்திட்டு இதனை மிகப்பெரிய ஐடி சாம்ராஜ்யமாக உருவாக்கிய நபர் தற்போதைய பாகிஸ்தானை சேர்ந்தவர் என்பதுதான் சுவாரசியமான கதை. அவர் தான் ஃபகீர் சந்த் கோலி இந்தியாவில் ஐடி துறையின் தந்தை என இவர் அழைக்கப்படுகிறார். ரத்தன் டாடாவுக்கு மிகவும் நெருக்கமானவர்.

இவர் தற்போதைய பாகிஸ்தானாக இருக்கும் சுதந்திரத்திற்கு முந்தைய ஒருங்கிணைந்த இந்தியாவின் பெஷாவர் நகரில் பிறந்தவர். 1924 ஆம் ஆண்டு பெஷாவரில் பிறந்த கோலி லாகூரில் இருக்கும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பிஏ மற்றும் பிஎஸ்சி படிப்பை முடித்து கோல்டு மெடல் பெற்றார். சுதந்திரத்தின் போது இந்தியாவும் பாகிஸ்தானும் தனித்தனி நாடுகளாக பிரிக்கப்பட்டன. இதனை அடுத்து அவர் கனடாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கே பிஎஸ்சி எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்து படித்தார். இதனை அடுத்து அமெரிக்கா சென்ற அவர் எம்ஐடி நிறுவனத்தில் சேர்ந்து எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் எம்எஸ் படிப்பை முடித்தார்.
இந்த சூழலில் தான் இந்தியாவில் 1969 ஆம் ஆண்டு ஜே. ஆர். டி. டாடா இந்தியாவில் ஐடி சேவைகள் சார்ந்த நிறுவனத்தை தொடங்குவதற்கு ஆசை கொண்டிருந்தார். அப்போது கோலியின் திறமையை கண்ட அவர் இந்தியாவில் டிசிஎஸ் நிறுவனத்திற்கு தலைமை ஏற்று வழி நடத்திச் செல்ல வேண்டும் என அழைப்பு விடுத்தார். முதலில் கோலிக்கு டிசிஎஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்வதில் விருப்பமில்லை ஆனால் டாடாவின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
கோலியின் தலைமையின் கீழ் டிசிஎஸ் நிறுவனம் இந்தியாவின் ஐடி திறனை வெளிப்படுத்தும் ஒரு நிறுவனமாக மாறியது. இதற்காக இவர் மேற்கொண்ட கடின உழைப்பு பல்வேறு உலக நாடுகளின் நிறுவனங்களையும் டிசிஎஸ் நிறுவனத்தை நோக்கி ஈர்க்கச் செய்தது. வங்கி சேவைகளில் தொடங்கி பல்வேறு ஐடி சேவைகள் வரை உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக டிசிஎஸ் உருவானது . 2003 ஆம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனம் ஒரு பில்லியன் ஆண்டு வருமானம் கொண்ட இந்திய ஐடி நிறுவனம் என்ற ஒரு புதிய உச்சத்தை எட்டியதோடு இந்தியாவில் பல ஐடி நிறுவனங்கள் உருவாகுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
கோலி ரத்தன் டாடாவுடன் நெருக்கமான நண்பராக இருந்தவர். 2020 ஆம் ஆண்டு மரணமடையும் வரை ஃபகீர் சந்த் கோலி தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனத்திற்கும் இந்தியாவில் ஐடி துறைக்கும் பாடுபட்டு வந்தார். ஒரு நிறுவனத்தை வழி நடத்தியவர் என்பதோடு மட்டும் இல்லாமல் இந்தியாவின் ஐடி துறைக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தவர் என இவரை கூறலாம்.


Click it and Unblock the Notifications