அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மகத்தான வெற்றி பெற்ற பின்பு முதலீட்டு சந்தையில் பெரும் மாற்றம் நடந்துள்ளது. வருட கணக்கில் கிடப்பில் இருந்த கிரிப்டோ சந்தை மீண்டும் உயிர்த்தெழுந்தது, முக்கிய முதலீட்டு கருவியாக மாறியது.
காரணம் டொனால்டு டிரம்ப் கிரிப்டோ ஆதரவாளர் என்பது மட்டும் அல்லாமல் டிரம்ப் கூறிய சில முக்கிய கிரிப்டோ திட்டங்களும் தான். இந்த நிலையில் நேற்று நடந்து முடிந்த பெடரல் ரிசர்வ்-ன் நாணய கொள்கை முடிவை அறிவிக்கும்போது அதன் தலைவர் ஜெரோம் பவல் கிரிப்டோ குறித்து முக்கியமான கருத்தை முன்வைத்தார். இதன் மூலம் பிட்காயின் மதிப்பு பெரும் சரிவை சந்தித்தது.

டொனால்டு டிரம்ப் கடந்த வாரம், தான் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, அமெரிக்கா எப்படி தனது எண்ணெய் தேவைக்காக பல இடத்தில் இருந்து திரட்டி எண்ணெய் இருப்பு சேமிக்கிறதோ, இதேபோன்று டிஜிட்டல் நாணயம் அதாவது கிரிப்டோகரன்சி தேசிய கையிருப்பை உருவாக்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தார். இதுக்குறித்து மீண்டும் ஆலோசனை செய்து வருவதாகவும் தெரிவித்தார் டிரம்ப், இந்த தகவல் வெளியான பின்பு தான் பிட்காயின் 1,07,700 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது.
இந்த ஒரு விஷயத்தை தான் தற்போது பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் உடைத்து எறிந்துள்ளார். பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் புதன்கிழமை, அமெரிக்க மத்திய வங்கி பிட்காயினை சேமித்து வைப்பதற்கான எந்தவொரு அரசு முயற்சியிலும் ஈடுபட விரும்பவில்லை என்று தெளிவுபடுத்தினார். "மத்திய வங்கிகள் பிட்காயின் வைத்திருக்க அனுமதிக்கப்படுவது இல்லை," என்று பவல் இரண்டு நாள் நாணய கொள்கைக் கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
அமெரிக்க ஆட்சியில் மட்டும் அல்லாமல் நாடாளுமன்றத்திலும் டிரம்ப் தலைமையிலான அரசின் ஆதிக்கம் செலுத்தும் காரணத்தால் இந்த ஆட்சியில் அறிவிக்கும் ஒவ்வொரு அறிவிப்பும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. இதனாலேயே கிரிப்டோ முதலீட்டாளர்கள் பணத்தை இதில் கொட்டி வருகின்றனர்.
டிரம்ப் வெற்றிக்கு பின்பு கிரிப்டோகரன்சியின் சந்தை மதிப்பு சுமார் 50%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதால், பிட்காயின் உட்பட பல கிரிப்டோகாயின்கள் விலை புதிய சாதனை உயர்வை எட்டியுள்ளது. ஆனால் ஜெரோம் பவலின் நேற்றைய அறிவிப்புக்கு பின்பு பிட்காயின் மதிப்பு பெரும் சரிவை எதிர்கொண்டு உள்ளது.
பிட்காயின் கடந்த ஒரு வாரத்தில் அதன் வரலாற்று உச்ச அளவான 1,07,700 டாலரை எட்டிய நிலையில், நேற்றை பெடரல் ரிசர்வ் அறிவிப்புக்கு பின்பு 10866 டாலரில் இருந்து 99,466 டாலர் வரையில் குறைந்துள்ளது. கிட்டத்தட்ட 5 சதவீதம் ஓரே நாளில் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications