அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்புகளை நிறுத்துவதாக புதன்கிழமை தனது நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் அறிவித்துள்ளது. இனி வரும் மாதங்களில் நாணயக் கொள்கையில் கவனமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கப்படும் என்பதை இந்த அறிவிப்பு மூலம் முதலீட்டாளர்களுக்கும், மக்களுக்கும் பெடரல் ரிசர்வ் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை வெளியிடப்பட்ட பெடரல் ரிசர்வ் அறிவிப்பில், 2024 முழுவதும் தொடர்ச்சியான வட்டி குறைப்புகள் அமல்படுத்தப்பட்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வட்டி விகிதங்கள் 4.25% முதல் 4.5% வரையிலான வரம்பிற்குள் இருக்கும் என்று பெடரல் ரிசர்வ் தெரிவித்துள்ளது.

பெடரல் ரிசர்வ் இந்த முடிவை எடுக்க முக்கியமான காரணம் உள்ளது, அமெரிக்காவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைவாகவும் நிலையாகவும் உள்ளது, பணவீக்கம் அதன் இலக்கான 2%-ஐ விட சிறிய அளவில் தான் அதிகமாக உள்ளது என்பதை கருத்தில் கொண்டு வட்டி விகித குறைப்பை இக்கூட்டத்தில் நிறுத்தியுள்ளது.
அமெரிக்காவில் டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.9% ஆக அதிகரித்துள்ளது, இது எதிர்பார்ப்புகளை காட்டிலும் அதிகமாகும். நுகர்வோர் விலைக் குறியீட்டு (சிபிஐ) வளர்ச்சி மூன்றாவது மாதமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வட்டி விகிதங்களில் அடுத்து ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், முக்கிய காரணிகளை தீவிரமாக கண்காணித்து தடுமாற்றங்களை கடந்து முடிவுகள் எடுக்கப்படும் என்று பெடரல் ரிசர்வ் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், டிசம்பர் கூட்டத்தில் 25 அடிப்படைப் புள்ளி குறைப்பு உடன் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 100 அடிப்படைப் புள்ளிகள் அதாவது 1 சதவீதம் வரையிலான வட்டி விகித்ததை குறைந்தது பெடரல் ரிசர்வ். இந்த நிலையில் பெடரல் ரிசர்வ் தற்போதைய நாணயக் கொள்கையில் மிகவும் கவனமாக அணுகுமுறையை ஏற்றுள்ள காரணத்தாலும், ஆட்சி மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை களையவும் இந்த வட்டி விகித குறைப்பை நிறுத்தியுள்ளது பெடரல் ரிசர்வ்.


Click it and Unblock the Notifications