கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அப்படி தான் கடலூரிலும் பல்வேறு பகுதிகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள 150 கிராமங்களில் வசிக்கும் 1.95 லட்சம் பயனாளிகளுக்கு முதல்வரின் நிவாரண உதவியாக தலா 2000 ரூபாய் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 9.75 லட்சம் கிலோ அரிசி, 1.95 லட்சம் கிலோ துவரம் பருப்பும் வழங்கப்படவுள்ளது. மழை நீரில் பயிர்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

48,907 ஹெக்டேர் நெற்பயிர்கள், 942 ஹெக்டேர் மக்காச்சோளம், 1,612 ஹெக்டேர் உளுந்து, 4,526 ஹெக்டேர் பிற பயிர்கள் என மொத்தம் 82,375 ஹெக்டேர் பயிர்கள் மழையின் காரணமாக கடுமையாக சேதமடைந்துள்ளன.
அதோடு மழையின் காரணமாக 1113 குடிசை வீடுகள், 291 காங்கிரிட் வீடுகளும் சேதமடைந்திருக்கின்றன. பொதுவாகவே கடலூர் மாவட்டம் ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போதும் கடுமையான பாதிப்புக்குள்ளாகும். அதேபோல இந்த முறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக செதமடைந்த வீடுகள் ஒவ்வொன்றுக்கும் 10,000 ரூபாய் நிவாரணமும், பகுதி அளவு சேதமடைந்த ஒவ்வொரு வீட்டிற்கும் 6,500 ரூபாய் நிவாரணத்தையும் அரசு அறிவித்திருக்கிறது. கனமழை கால்நடைகளையும் விட்டு வைக்கவில்லை. 49 மாடுகள், 66 கன்றுகள், 101 ஆடுகள், 14,035 கோழிகள் ஆகியவையும் பலியாகியுள்ளன.
ஒவ்வொரு பசுவுக்கும் 37,500 ரூபாயும், கன்று குட்டிக்கு 20,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 4,000 ரூபாயும், கோழி ஒன்றுக்கு 100 ரூபாயும் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. அதோடு இந்த மழையின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட 26,247 பேருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் 406 முகாம்களை நடத்தியது. இதில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 37,400 முகாம்களை நடத்தியது.
அதோடு மாவட்ட நிர்வாகம் 5,788 குடும்பங்களை தங்க வைப்பதற்காக 37 தங்கும் இட முகாம்களை அமைத்துள்ளது. இதில் 3.14 லட்சம் உணவுப் பொட்டலங்களையும் விநியோகம் செய்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 80 கிலோமீட்டர் தூரத்திற்கு மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலையை மீட்டமைக்கும் பொருட்டு 2000 தொழில் வல்லுநர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications