ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்ப நிறுவனமான ஓபன் AI, ஃபிட்ஜி சிமோ என்பவரை அப்ளிகேஷன் சிஇஓ-வாக நியமித்துள்ளது. இந்த புதிய நியமனம் குறித்து கடந்த வியாழக்கிழமை அன்று ஓபன் AI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேன் அறிவித்தார். அதோடு ஃபிட்ஜி சிமோ தனக்கும் கீழ் இருந்து செயல்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஒரு பதிவையும் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் சாம் ஆல்ட்மேன் வெளியிட்டுள்ளார். அதில் ஃபிட்ஜி சிமோவை டேக் செய்து ஓபன் AI நிறுவனத்தின் புதிய பொறுப்பில் ஃபிட்ஜி நியமிக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது", என்று குறிப்பிட்டு போஸ்ட் செய்திருந்தார்.

ஓபன் AI நிறுவனத்தில் ஃபிட்ஜி சிமோவின் பங்களிப்பு குறித்த தெளிவுபடுத்திய சாம் ஆல்ட்மேன் தான் ஓபன் AI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவே தொடர்ந்து நீடிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதோடு தற்போது நிறுவனம் சூப்பர் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதனால்.. தான் பாதுகாப்பு, ஆராய்ச்சி, கம்ப்யூட்டிங் போன்ற முக்கிய துறைகளில் கவனம் செலுத்த இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். சாம் ஆல்ட்மேனின் பொறுப்புகள் சில சிமோவுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு அவர் மேற்பார்வையிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவனத்தில் சிமோவின் பங்கைப் பற்றி பேசுகையில் சாம் ஆல்ட்மேன், "ஃபிட்ஜி தனித்து செயல்படக்கூடியவர். கடந்த 1 வருடமாக நாங்கள் ஓபன் AI நிறுவனத்தில் இணைந்து பணியாற்றி வருகிறோம். எங்களுடைய இலக்குகளை அடைய அவர் ஆழ்ந்த அர்ப்பணிப்பை இதுவரையில் கொடுத்திருக்கிறார். அதை நான் கவனித்திருக்கிறேன். அடுத்து வரும் நாட்களில் இதைவிட அதிகமான அர்ப்பணிப்பை அவர் வழங்குவார். எங்களுடைய குழுவுக்கு உதவ இவரை விட சிறந்த ஊழியரை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை", என்று கூறியிருந்தார்.
சிமோ இந்த புதிய நியமனத்தின் மூலம் நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளார். இவர் தலைமைத்துவம், தயாரிப்பு மற்றும் செயல்பாடுகள் போன்றவற்றில் பணிபுரிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கூறுகையில் சிமோ, "இந்த வாய்ப்புக்கு நன்றி! இவ்வளவு திறமையான குழுவுடன் பணியாற்றுவதை பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன்!", என்று கூறியிருந்தார்.
யார் இந்த ஃபிட்ஜி சிமோ?: ஃபிட்ஜி சிமோ அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி ஆவார். தற்போது இன்ஸ்டாகார்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், தலைவராகவும் இருந்து வருகிறார். அவருடைய இன்ஸ்டாகிராம் பயோ விபரங்களின்படி, தற்போது சிமோ மெட்ரோடோரா இன்ஸ்டியூடின் இணை நிறுவனராகவும் இருந்து வருகிறார். இவருக்கு வயது 39. பேஸ்புக் நிறுவனத்தில் சுமார் 10 ஆண்டுகள் வரை பணியாற்றியுள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் நிர்வாகிகளில் ஒருவராக இருந்துள்ளார். இவர் யுசிஎல்ஏ ஆண்டர்சன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் மற்றும் ஹெச்இசி பாரிஸ் பிசினஸ் ஸ்கூலின் முன்னாள் மாணவி.


Click it and Unblock the Notifications