இந்திய ஆட்டோமொபைல் துறைக்குள் பல ஆண்டுகள் விடாப்பிடியாக முயற்சி செய்து நுழைந்துள்ளார் சஜ்ஜன் ஜிண்டால், பிடிச்சாலும் புளியங்கொம்பைப் பிடிக்க வேண்டும் என்பது போல் பல மாத பேச்சுவார்த்தை, பல முறை சீன பயணம் இந்தியாவின் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தில் சுமார் 35 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளார்.
இந்தியாவில் கார்களைத் தயாரிக்க வேண்டும் என நீண்ட காலமாகத் திட்டமிட்டு வரும் JSW குழுமத்தின் சஜ்ஜன் ஜிண்டால் பல முயற்சிகளில் தோல்வி அடைந்தாலும் இந்த முறை பெரும் வெற்றியை அடைந்துள்ளார். இந்தியாவில் முன்னணி கார் பிராண்டாக இருக்கும் MG Motor நிறுவனத்தைச் சீனாவின் SAIC மோட்டார் நிர்வாகம் செய்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் MG Motor நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யச் சீனாவின் SAIC மோட்டார் மற்றும் சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான JSW குரூப் கூட்டணி நிறுவனத்தை உருவாக்க உள்ளது. இந்தக் கூட்டணி நிறுவனத்தில் JSW குரூப் சுமார் 35 சதவீத பங்குகளைக் கைப்பற்றியள்ளது.
இந்தியாவில் MG Motor நிறுவனத்தின் உற்பத்தி, வர்த்தகம், பிராண்டிங் ஆகியவற்றை விரிவாக்கம் செய்யவும், கீரின் மொபிலிட்டுச் சொல்யூஷன்ஸ்-ஐ மேம்படுத்தவும் இக்கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளதாக JSW குரூப்-ன் பார்த் ஜிண்டால் தெரிவித்துள்ளார். SAIC மோட்டார் மற்றும் JSW குரூப் மததியிலான ஒப்பந்தம் புதன்கிழமை லண்டனில் நடந்தது.
இந்தக் கூட்டணி ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் MG Motor நிறுவனத்தை JSW குரூப், SAIC மோட்டார் நிர்வாகத்துடன் இணைந்து நடத்த உள்ளது. இப்புதிய கூட்டணி மூலம் MG Motor நிறுவனத்தின் ஹெக்டர் மற்றும் ஏஸ்டர் ஆகிய எஸ்யூவி கார்களின் உற்பத்தி விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதேபோல் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் வர்த்தகமும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
இக்கூட்டணிக்குச் சீனாவின் SAIC மோட்டார் தொடர்ந்து தேவையான தொழில்நுட்ப உதவிகள், பொருட்கள் உதவிகளை அளிக்கும். ஜூன் மாதத்தில் இருந்து சஜ்ஜன் ஜிண்டால் இக்கூட்டணியைச் சாத்தியப்படுத்தக் கடுமையாக முயன்று வருகிறார். இதற்காகப் பல முறை சீனா சென்று SAIC மோட்டார் நிர்வாகத்தையும், நிர்வாக அதிகாரிகளையும் சந்தித்துள்ளார்.
மத்திய அரசு இந்தியா - சீனா எல்லை பிரச்சனைக்குப் பின்பு சீனா மற்றும் சீனா சார்ந்த நிறுவனங்களின் முதலீட்டுக்கு அனுமதிக்காத காரணத்தால் இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்கள் விரிவாக்கம் செய்ய முடியாமலும், இந்திய வர்த்தகச் சந்தையில் போட்டிப்போட முடியாமலும் தவித்து வருகிறது. இந்த நிலையில் தான் SAIC மோட்டார்-ஐ கட்டம் கட்டி சஜ்ஜன் ஜிண்டால் MG மோட்டார்-ன் 35 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளார்.


Click it and Unblock the Notifications