இந்தியாவின் பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நிதிநிலையை மேம்படுத்த மத்திய நிதியமைச்சகம் சுமார் 3000 கோடி ரூபாய் அளவிலான நிதியை மூலதனமாக உட்செலுத்த முடிவு செய்துள்ளது. இதில் முக்கியமாக இந்த மூலதனத்தை நடப்பு காலாண்டுக்குள் செய்யவும் நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு இந்திய இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நிதிநிலையை மேம்படுத்த மூலதனத்தை அதிகரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் தற்போது மத்திய அரசு நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களில் இந்த 3000 கோடி ரூபாயை நிதியமைச்சகம் முதலீடு செய்ய உள்ளது.

மேலும் நாடாளுமன்றத்தில் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் மூலதனத்தை 7,500 கோடி ரூபாயாகவும், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆகிய இரு நிறுவனத்தின் மூலதனத்தைத் தலா 5000 கோடி ரூபாய் வரையில் உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் 2020-21ஆம் நிதியாண்டுக்கான சுமார் 6.28 லட்சம் கோடி ரூபாய் அளவிலான செலவின திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற நிலையில், இத்திட்டத்தின் மூலம் பல துறைகள் முதலீடுகள் மற்றும் நிதியுதவிகளைப் பெற உள்ளது.
இதன் ஒரு பகுதியாகத் தான் நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் ஆகிய 3 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 3000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications