மும்பை: மும்பையில் ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்ததாக வெளியான செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் உரிமத்தை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இடைநீக்கம் செய்துள்ளது.
மும்பையில் உள்ள மலாட்டில் வசிக்கும் ஓர்லெம் பிரெண்டன் செர்ராவ் என்ற 26 வயது மருத்துவர் தனியார் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார். ஃபார்ச்சூன் டெய்ரிக்கு சொந்தமான யம்மோ ஐஸ்கிரீம்ஸில் இருந்து மூன்று ஐஸ்கிரீம்கள் அவருக்கு டெலிவரி செய்யப்பட்டன.

அவர் ஆசையுடன் அந்த ஐஸ்கிரீமை உண்ட போது அதில் மனித விரல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களிலும் பரவியது.
ஐஸ்கிரீமில் மனிதவிரல் இருந்தது தொடர்பாக மலாட் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதனை அடுத்து உணவு கலப்படம் மற்றும் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது என்பன உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஃபார்ச்சூன் டெய்ரி நிறுவனம் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். காவல்துறையினர் ஐஸ்கிரீமையும் அந்த மனித விரலையும் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் ஃபார்ச்சூன் டெய்ரி நிறுவனத்தின் ஐஸ்கிரீம் தயாரிப்பு உரிமத்தை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இடைநீக்கம் செய்துள்ளது. சம்பந்தப்பட்ட ஐஸ்கிரீம் இந்நிறுவனத்தின் இந்தாபூரில் உள்ள ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.
இது ஐஸ்கிரீம் தயாரிப்புக்கு மத்திய உரிமம் பெற்றுள்ளது என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தாப்பூர் மட்டுமின்றி ஃபார்ச்சூன் டெய்ரிக்கு சொந்தமான மற்ற ஐஸ்கிரீம் தயாரிப்பு ஆலைகளிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதன் பின்னர் சம்பந்தப்பட்ட ஐஸ்கிரீம் தயாரிக்கப்பட்ட ஆலையில் இருந்தும், மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளதாம்.
தற்போதைக்கு ஃபார்ச்சூன் டெய்ரி நிறுவனத்தின் உரிமம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே தங்களது பிராண்டின் புகழை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே யாரோ சதி செய்துள்ளனர் என ஃபார்ச்சூன் டெய்ரி இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உரிமையாளர் சச்சின் ஜாதியோ தெரிவித்துள்ளார்.
தற்காலிகமாக தான் நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது, நிறுவனத்திற்கு சீல் வைத்து விடவில்லை என கூறியுள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஃபார்ச்சூன் டெய்ரி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தாப்பூரில் தங்களுடைய உற்பத்தி ஆலையை செயல்படுத்தி வருகிறது. இங்கே ஒரு நாளைக்கு 2 லட்சம் பாலை கொள்முதல் செய்கின்றனர். ஐஸ்கிரீம் மட்டுமில்லாமல் வெண்ணெய் மற்றும் பால் பவுடர்களை தயாரிக்கின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications