சென்னை: இந்தியாவில் வேலைக்கு செல்பவர்களில் 70 சதவீதம் பேர் தங்களது வேலையில் திருப்தி இல்லை என தெரிவித்து இருப்பதாக ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது . Happiest Places to Work என்ற நிறுவனம் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களிடம் அவர்களின் பணிச் சூழல்கள், வேலையில் வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில் வேலைக்கு செல்பவர்களில் 70 சதவீதம் பேர் தங்களது வேலையில் திருப்தி இல்லை என தெரிவித்துள்ளார்களாம். மேலும் நாட்டின் கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் தங்களுடைய வேலையை தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். அதுவே வடக்கு மாநிலங்களில் வேலைக்கு செய்யக்கூடிய ஆண்கள் தங்களுடைய வேலை தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை எனக் கூறியுள்ளனர்.

இந்தியாவில் ஃபின்டெக் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தான் மகிழ்ச்சியுடன் இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது. அதே வேளையில் ரியல் எஸ்டேட் துறையில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுடைய வேலையில் மிகுந்த அதிருப்தியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்களாம்.
தற்போது பல்வேறு துறைகளிலும் வேலையில் இருக்கக்கூடிய நபர்களில் 54 சதவீதம் பேர் தங்களுடைய வேலையை விடுத்து வேறு நிறுவனத்திற்கு மாற வேண்டுமென விருப்பம் தெரிவிக்கிறார்களாம். தனிப்பட்ட முறையில் இந்த வேலை தங்களுக்கு மன நிம்மதியை தரவில்லை என்றும் நிறுவனங்கள் போதிய அளவிலான ஆதரவ அமைப்புகளை கொண்டிருக்கவில்லை என்பதையுமே இவர்கள் காரணமாக கூறுகின்றனர் .
ஊழியரின் திறனை வளர்ப்பது மற்றும் சிறந்த பணிச்சூழலை ஏற்படுத்தி தருவது போன்ற செயல்களில் ஈடுபடும் நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களில் 60% பேர் தாங்கள் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும் ஊழியர் சிறந்த செயல் திறன் கொண்டவராகவும் தங்களுடைய நிறுவனத்திற்கும் தங்களுடைய வேலைக்கும் மிகப் பொறுப்புடன் செயல்படுபவராகவும் இருக்கிறார் என இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.
பொதுவாக 70 சதவீத ஊழியர்கள் தங்களுடைய வேலை திருப்தி அளிக்கவில்லை என்றும் 54 சதவீத ஊழியர்கள் தற்போதைய வேலையை விட்டு விட வேண்டும் என நினைப்பதாகவும் இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
குறிப்பாக மில்லினியல் வயதினை சேர்ந்த 59 சதவீதம் பேர் தங்களுடைய வேலையிலிருந்து மாற வேண்டும் என விரும்புகிறார்களாம். மேலும் ஒரு குழுவாக இணைந்து செயல்படுவதில் சவால்கள் இருப்பதாக 63 சதவீதம் பேரும் 62 சதவீதம் பேர் தங்களுடைய நிறுவனங்களில் தங்களின் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்க முடிவதில்லை என்றும் கூறியுள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications