தீபாவளி பண்டிகை பட்டாசுகள் இன்றி முழுமை அடையாது. அதுவும் இன்றைய காலக்கட்டத்தில் ரக ரகமான பட்டாசுகள் மார்க்கெட்டுக்கு வந்துவிட்டன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரக்கூடியதாக இருப்பதால் ஒரு முறையாவது வெடித்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்து விடுகிறது. ஆனால் பட்டாசுகள், அகல் விளக்குகள் போன்றவற்றால் தீ விபத்து ஏற்படும் அபாயமும் அதிகம். நம்மில் பலர் ஹெல்த் இன்சூரன்ஸ், லைஃப் இன்சூரன்ஸ் போன்றவற்றை வாங்கி வைத்திருப்போம் ஆனால் பலரும் மறக்கும் ஒரு விஷயம் என்றால் அது ஹோம் இன்சூரன்ஸ்.
ஹோம் இன்சூரன்ஸ் பெறுவதால் ஏற்படும் நன்மை என்ன?: வீட்டின் சுவர், ரூஃப், தரை போன்றவற்றில் ஏதாவது சேதம் ஏற்பட்டாலும் காப்பீடு கிடைக்கும். அதே நேரம் வீட்டில் உள்ள ஃபர்னிச்சர், டிவி, ஃப்ரிட்ஜ் போன்ற எலக்ட்ரானிக் ஐட்டங்கள், ஆடைகள் உள்ளிட்ட பொருட்களுக்கும் கவரேஜ் கிடைக்கும்.

உங்கள் வீட்டுக்கு எவ்வளவு காப்பீடு தேவை என்பதை கணக்கிடுவது எப்படி?: முதலில் உங்களுடைய வீட்டின் ஒரு சதுர அடி இடத்திற்கு மறுசீரமைப்பு கட்டணம் எவ்வளவு ஆகும் என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள். அதன் பிறகு வீட்டின் மொத்த பரப்பளவுக்கும் இதை பெருக்கினால் காப்பீட்டு தொகை கிடைத்து விடும். அதோடு பொருட்கள் வாங்கப்பட்ட அசல் மதிப்பு எவ்வளவு? அவற்றை இப்போது புதிதாக வாங்க எவ்வளவு செலவாகும் என்பதை எல்லாம் கணக்கிட வேண்டும். நகைகள் மற்றும் பிற விலை மதிப்பற்ற பொருட்களுக்கு தனியாக ஆட்-ஆன் பாலிசி தேவைப்படலாம்.
தீ விபத்து ஏற்பட்டால் என்ன நடக்கும்?: ஒரு வேளை தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வீட்டின் உள்ளே விழுந்து தீப்பிடித்து சேதம் ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு வழங்கப்படும். அதேபோல மின்சார கோளாறு ஏற்பட்டு உங்கள் வீட்டில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் தீப்பிடித்து சேதம் ஏற்பட்டாலும் சரி.. வீட்டின் மற்ற பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டாலும் சரி காப்பீடு கிடைக்கும். ஆனால் பழுதான பொருட்களை மாற்றுவதற்கு எந்த ஒரு காப்பீடும் கிடைக்காது. இதற்கு எலக்ட்ரிக்கல் பிரேக் டவுன் பாலிசி தேவைப்படலாம்.
இன்சூரன்ஸ் பெறுபவரின் அலட்சியத்தால் தீ பிடித்தால் கிளைம் கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே அகல் விளக்குகள் மற்றும் பட்டாசுகளை அலட்சியமாக பயன்படுத்தக் கூடாது. அதேபோல வீட்டின் பால்கனியில் வெடி வெடிப்பது, தீ பிடிக்கும் பகுதிக்கு பக்கத்திலேயே விளக்கு ஏற்றி வைப்பது போன்ற தவறுகளை செய்யக் கூடாது.
இன்சூரன்ஸ் பெறும் போது எந்தெந்த விஷயங்களை கவனிக்க வேண்டும்?: வீட்டின் உரிமையாளர் பெயரில்தான் பாலிசி இருக்க வேண்டும். பெற்றோருக்கு பதிலாக அவர்களுடைய பிள்ளைகள் பிரீமியம் செலுத்தினாலும் யார் பெயரில் வீடு இருக்கிறதோ? அவருடைய பெயர் தான் பாலிசி ஆவணங்களில் இருக்க வேண்டும். அதேபோல வீட்டில் ஃபயர் எக்ஸ்டிகூசர் மற்றும் அலாரம் இருந்தால் அதையும் பாலிசி பெறும் போது தெரிவியுங்கள். இதனால் பிரீமியம் தொகையில் சில தள்ளுபடிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோல வீடு மட்டுமல்லாமல்.. வீட்டில் உள்ள பொருட்களுக்கும் சேர்த்து காப்பீடு பெறுவது அவசியம்.
விபத்து நடந்தால் கிளைம் பெற விண்ணப்பிப்பது எப்படி?: விபத்து நடந்துவிட்டால் உடனே காப்பீட்டு நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும். சேதம் அடைந்த பகுதி மற்றும் பொருட்களை தெள்ளத் தெளிவாக புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும். அவசரமாக ஏதாவது பழுது பார்க்கும் வேலை இருந்தால் அதை செய்துவிட்டு அதற்கான ரசீது மற்றும் பில்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு காப்பீட்டு நிறுவனத்தில் தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து க்ளைம் பெற விண்ணப்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications
