சென்னையில் மார்ச் மாதம் முதல் வெயில் அதிகரிக்க தொடங்கிவிட்டது. மே மாதமே வரவில்லை ஆனால் அதை போல வெயில் தாக்கம் வந்துவிட்டது. இந்த சூழலில் சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஏசி மின்சார ரயில்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
சென்னையில் முதன்முறையாக 'ஏசி' மின்சார ரயில் இன்று (ஏப்ரல்19) முதல் இயங்கத் தொடங்கியுள்ளது. சென்னையின் இந்த முதல் ஏசி மின்சார ரயில் சென்னை ஐசிஎப் ஆலையில், தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 பெட்டிகள் கொண்ட முதல் 'ஏசி' மின்சார ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும் என மொத்தம் 4,914 பேர் பயணிக்க முடியும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

முதன்முதலில் மும்பையில் தான் புறநகர் ரயில் சேவையில் ஏசி ரயில்கள் கொண்டு வரப்பட்டன. இதற்கு மும்பைவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை அடுத்து சென்னையிலும் ஏசி மின்சார ரயில் சேவை கொண்டு வரப்பட்டுள்ளது என தென்னக ரயில்வே கூறியுள்ளது. சென்னையில் கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான வழித்தடத்தில் தான் அதிக எண்ணிக்கையில் மக்கள் மின்சார ரயில்களில் பயணம் செய்கின்றனர். எனவே முதலில் இந்த வழித்தடத்தில் தான் ஏசி ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏசி ரயிலில் தானியங்கி கதவுகள், பயணிகள் தகவல் அமைப்புகள், சிசிடிவி கேமராக்கள், நுழைவு மற்றும் வெளியேறும் பாயிண்டுகள் ஆகிய வசதிகள் இருக்கின்றன. சென்னை கடற்கரையில் இருந்து காலை 7.05 மணி, பிற்பகல் 3:45 மணி ஆகிய நேரங்களில் புறப்படும் 'ஏசி' ரயில், தாம்பரத்துக்கு காலை 7:42, மாலை 4:26 மணி ஆகிய நேரங்களில் வந்தடையும். செங்கல்பட்டுக்கு முறையே காலை 8:35, மாலை 5:25 மணிக்கு செல்கிறது. செங்கல்பட்டில் இருந்து காலை 9 மற்றும் மாலை 5:45 மணிக்கு ரயில் புறப்படும். சென்னை கடற்கரைக்கு காலை 10:30, இரவு 7:15 மணிக்கு வருகை தரும்.
இதே போல தாம்பரம்- சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்திலும் ஒரு ஏசி மின்சார ரயில் இயக்கப்படுகிறது. இது காலை 5.45 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு கடற்கரைக்கு 6.45 மணிக்கு வருகைதரும். இரவு 7.35 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு இரவு 8.35 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
கடற்கரை செங்கல்பட்டு இடையிலான ஏசி ரயில் கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்துார், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனுார் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ரயிலில் குறைந்தபட்சமாக 35 ரூபாயும், அதிகபட்சமாக 105 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்சார ரயில் முதல் வகுப்பு சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் இந்த ரயிலில் பயணிக்க அனுமதி கிடையாது. இந்த ரயிலுக்காக தனி கட்டண அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர். சென்னைவாசிகள் இந்த கோடைகாலத்தில் ஏசி ரயில்களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications