இந்தியா தன்னுடைய அண்டை நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக அரசுக்கு எதிரான மக்கள் எழுச்சியை கண்டுவருகிறது. சிறிய அளவில் தொடங்கும் போராட்டங்கள் ஆட்சியையே கவிழ்த்து விடுகின்றன. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த போராட்டங்களில் இறுதியில் நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களை ஆட்சி கட்டிலில் இருந்து இறக்கிவிடுகிறது.
நேபாளத்தில் போராட்டம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் மாபெரும் இளைஞர்கள் எழுச்சி நடந்திருக்கிறது . இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு விதித்த தடை அந்நாட்டு இளைஞர்களை அரசுக்கு எதிராக பெரிய அளவில் போராட வைத்திருக்கிறது. சமூக வலைத்தளங்களுக்கு விதித்த ஒரு தடைக்காக இப்படி லட்சக்கணக்கான இளைஞர்கள் வந்து போராடுகிறார்களா என்றால் அது உண்மை கிடையாது.

இளைஞர் எழுச்சிக்கு காரணம் என்ன?: படித்த படிப்புக்கு வேலை வாய்ப்பு இல்லை, விலைவாசி உயர்வு, நாட்டில் ஊழல் அதிகரிப்பு இப்படி பல்வேறு விஷயங்களால் ஏற்பட்ட ஆத்திரம் தான் மக்களை இப்படி பொங்க எரிமலையாக வெடிக்க செய்திருக்கிறது. பல காலமாக தங்களுக்குள் அடக்கி வைத்திருந்த கோபத்தை தற்போது அவர்கள் வெளிப்படுத்த தொடங்கியிருக்கின்றனர் . அதற்கு ஒரு பொறியாக தான் இந்த சமூக வலைதளங்களுக்கான தடை என்பது அமைந்துவிட்டது.
பிரதமர் ராஜினாமா: இளைஞர்கள் குறிப்பாக ஜென் ஸீ இளைஞர்கள் நடத்திய இரண்டு நாள் போராட்டம் நேபாளத்தை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. இறுதியில் நேபாள நாட்டு பிரதமர் கே பி சர்மா ஒலி இளைஞர்களின் போராட்டத்திற்கு அடிபணிந்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். போராட்டக்காரர்களுக்கு இந்த வெற்றி அத்தனை எளிதாக கிடைத்துவிடவில்லை.
நாடாளுமன்றத்திற்கு தீ: காத்மாண்டுவில் தொடங்கிய போராட்டம் மெதுவாக நாடு முழுவதும் பரவியது. இளைஞர்கள் அரசு அலுவலகங்கள், பிரதமர் அலுவலகம், வீடு, அமைச்சர்களின் வீடு என எதையும் விட்டுவைக்கவில்லை. அரசு அலுவலகங்கள் மீது கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ, நாடாளுமன்றத்திற்கு தீ என கடுமையாக தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர். சில அமைச்சர்கள் தாக்குதலுக்கும் ஆளானார்கள். இறுதியாக தாக்குபிடிக்க முடியாமல் பிரதமர் சர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

3 ஆண்டுகளில் 3 மக்கள் புரட்சி: இந்தியாவின் அண்டை நாட்டில் இப்படி இளைஞர்கள் எழுச்சி நடப்பது என்பது இது முதல் முறை கிடையாது .கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா தன்னை சுற்றி இருக்கக்கூடிய அண்டை நாடுகளில் எல்லாம் இதுபோன்ற மக்கள் எழுச்சியை சந்தித்து இருக்கிறது .முதலில் இலங்கை , பின்னர் வங்கதேசம் தற்போது நேபாளம்.
இலங்கை: இலங்கையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசாங்கத்திற்கு எதிராக 2022 ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவிலான மக்கள் எழுச்சி போராட்டம் நடந்தது. கிட்டத்தட்ட நேபாளத்தில் நாம் என்ன காண்கிறோமோ அதே போன்ற ஒரு நிலை தான் இலங்கையிலும் காணப்பட்டது. அதிபர் ராஜபக்சே தலைமையிலான குடும்பம் பெரிய அளவில் ஊழல் செய்து ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தது. ஆனால் சாமானிய மக்களோ ஒரு நாளைக்கு 13 மணி நேரம் மின்வெட்டு ,பல மடங்கு உயர்ந்த விலைவாசி, எரிபொருளுக்கு தட்டுப்பாடு உணவு மற்றும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு என மிக மோசமான ஒரு சூழலுக்கு ஆளாகி இருந்தனர்.

நாட்டை விட்டே ஓடிய ராஜபக்சே: இந்த சூழலில் தான் அரசுக்கு எதிராக சிறிய அளவில் தொடங்கிய போராட்டம் இலங்கையில் மாபெரும் மக்கள் புரட்சியாக வெடித்தது .அதிபர் மாளிகைக்குள்ளாகவே நுழைந்த மக்கள் எந்த ஒரு அரசும் அதிபரும் மக்கள் சக்திக்கு எதிராக ஒன்றுமே இல்லை என்பதை நிரூபணம் செய்தனர். அதிபர் ராஜபக்ச குடும்பத்தின் மீது இருந்த கோபம் அரசு அலுவலகங்களை சூறையாட வைத்தது.இறுதியாக அதிபர் ராஜபக்சே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டே தப்பி ஓடினார். இதன் மூலம் ராஜபக்சே குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்தது.
பற்றி எரிந்த வங்கதேசம்: 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் மற்றொரு அண்டை தேசமான வங்கதேசம் இதே போன்ற ஒரு மாபெரும் மக்கள் போராட்டத்தை கண்டது. வங்கதேச அரசு கொண்டு வந்த இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்த தொடங்கினர். ஜூன் மாதம் தொடங்கிய போராட்டம் படிப்படியாக பிரதமர் ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான போராட்டமாக மாறியது.

பிரதமர் ராஜினாமா: வங்கதேசம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது, பெரிய அளவில் அரசு இதனை ஒடுக்க நினைத்தது ஆனால் மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறியது. மக்களுக்காக எந்த ஒரு சேவையும் செய்யாமல் தன்னுடைய நலனையும் தன்னை சார்ந்தவர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அரசாங்கம் செயல்படும்போது மக்கள் கொதித்து எழுகிறார்கள். அதை தான் வங்கதேசத்தில் காண முடிந்தது. 2024 ஜூன் மாதம் தொடங்கிய போராட்டம் இறுதியில் ஆகஸ்டில் பிரதமர் ஷேக் அசீனாவை ராஜினாமா செய்ய வைத்தது.மாணவர்கள் அரசு அலுவலகங்களுக்கு தீ வைத்தனர் ,அரசு வாகனங்களை சூறையாடினர் காவல் நிலையங்களை கூட விட்டு வைக்கவில்லை கிட்டத்தட்ட. இந்த வன்முறையில் 200 பேர் கொல்லப்பட்டனர் .
போராட்டங்களின் ஒற்றுமை: தற்போது இதே போன்ற ஒரு போராட்டத்தை தான் நாம் நேபாள நாட்டிலும் பார்க்கிறோம். தெற்காசிய நாடுகளில் நடந்த இந்த மக்கள் எழுச்சிகளுக்கு எல்லாமே ஒரு ஒற்றுமை இருக்கிறது. இவை அனைத்துமே இந்தியாவின் அண்டை நாடுகள். இந்த மக்கள் ஊழல், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றுக்கு எதிராக தான் கொதித்தெழுந்தார்கள். குறிப்பாக இவை அனைத்துமே இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம். இந்த நாடுகளுக்கு எல்லாம் சீனா அதிகளவில் நிதியுதவி செய்துள்ளது.
மக்கள் தான் மன்னர்கள்: இந்த மூன்று நாடுகளிலும் நடந்த போராட்டங்கள் நமக்கு உணர்த்துவது ஒரு விஷயத்தை தான். இளைஞர்கள் மற்றும் மக்கள் நீண்ட காலம் அரசின் மீது தங்களுக்கு இருக்கக்கூடிய கோபத்தை அடக்கி வைத்திருக்க மாட்டார்கள். ஒரு சின்ன தீப்பொறி கிடைத்தாலே போதும் எரிமலை போல வெடித்து சிதறிவிடுவார்கள். அரசு, நாட்டை ஆளும் தலைவர்கள் என யாராக இருந்தாலும் எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் அவர்கள் மக்களுக்கான சேவகர்கள் மட்டுமே, அந்த பாதையை விட்டு அவர்கள் விலகும் போது இது போன்ற எழுச்சிகள் மூலம் மக்கள் அவர்களுக்கான பாடத்தை கற்றுத்தந்துவிடுகிறார்கள்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications