சென்னை: தாஜ் என்ற பெயரை கேட்டாலே அவர்களின் நட்சத்திர விடுதிகளும் அதில் கிடைக்கும் விருந்தோம்பலும் தான் நினைவுக்கு வரும். கூடிய விரைவில் அந்த அடையாளம் மாறப் போகிறது. தாஜ் என்ற உடனே சென்னையில் அமைய இருக்கும் பிரம்மாண்ட குடியிருப்புகள் தான் நம் கண் முன் தோன்ற போகின்றன.
சென்னையின் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான அம்பா குழுமம் , தாஜ் ஹோட்டலுக்கு பெயர் பெற்ற இந்தியாவின் முன்னணி நிறுவனமான இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் முதன்முறையாக பிராண்டட் குடியிருப்புகளை கட்ட இருக்கிறது. மத்திய சென்னையில் நெல்சன் மாணிக்கம் சாலையில் பிரம்மாண்டமான முறையில் இது கட்டப்படுகிறது. தாஜ் ஸ்கை வியூ ஹோட்டல்ஸ் மற்றும் ரெசிடென்சிஸ் என்ற பெயரில் ஹோட்டலுடன் சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறது.

சென்னையில் தாஜ் கன்னிமாரா, தாஜ் கோரமண்டல், தாஜ் ஃபிஷர்மேன்ஸ் கோவ் வரிசையில் தாஜ் ஸ்கைவ்யூ ஹோட்டல் மற்றும் ரெசிடென்சி அமைகிறது. 850 கோடி ரூபாய் மதிப்பில் இந்த கட்டுமான பணிகள் நடப்பதாக சொல்லப்படுகிறது. 253 தாஜ் ஹோட்டல் அறைகள் மற்றும் 123 பிராண்டட் தாஜ் குடியிருப்புகள் இதில் கட்டப்படுகின்றன. தற்போது இந்த கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பணிகள் முடியும் என சொல்லப்படுகிறது.
இரண்டு குடியிருப்பு கோபுரங்கள் மற்றும் ஒரு தாஜ் ஹோட்டல் என இது திட்டமிடப்பட்டுள்ளது. உலகின் மிகச்சிறந்த பொறியாளர்களும் கட்டிட கலை வல்லுனர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்களாம். இங்கு அமையும் வீடுகளின் மதிப்பு 6.5 கோடி முதல் 19 கோடி ரூபாய் வரை இருக்கும் என்றும் உலகத்தரம் வாய்ந்த குடியிருப்பாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
ரூஃப் டாப் ரெஸ்டாரெண்ட், கிளப் ஹவுஸ் என அனைத்து வசதிகளும் குடியிருப்புவாசிகளுக்கு கிடைக்கும். 24 மணி நேர மின்சார வசதி, குளிரூட்டப்பட்ட அறைகள், பாட்மிட்டன், டென்னிஸ், ஸ்குவாஷ் உள்ளிட்டவற்றுக்கான மைதானங்கள் அமைய உள்ளன. இந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் தாஜ் ஹோட்டலில் அமையும் பார், உணவகம், ஸ்பா, சலூன் , தியேட்டர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம்.
இந்தியாவில் முதன்முறையாக ஹோட்டலும் குடியிருப்பும் ஒருங்கிணைந்த பகுதியாக இது இருக்கும் என தாஜ் மற்றும் அம்பா குழும அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் உள்ள முக்கியமான 8 மெட்ரோபாலிட்டன் நகரங்களில் அடுத்தடுத்து இதே போன்ற குடியிருப்புகளை தாஜ் நிறுவனம் கட்டமைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இது போன்ற வசதிகளைக் கொண்ட குடியிருப்புகளை மெட்ரோ நகரங்களில் அமைக்கும் பொழுது, அதிக சொத்து மதிப்பு கொண்டவர்கள் இதை வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக இந்த நிறுவனங்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications