டெல்லி: புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கும், புதிதாக ஆட்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களுக்கும் லாபகரமான மூன்று திட்டங்களை மத்திய அரசு பொது பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. 2024-25ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமரின் தொகுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக "வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை" ( employment-linked incentive schemes) வழங்கும் மூன்று திட்டங்களை அரசு செயல்படுத்த உள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த மூன்று திட்டங்கள் ஈபிஎப்ஓ-வில் பதிவு செய்வது, முதல் முறையாக வேலைக்கு சேர்பவர்களை அங்கீகரிப்பது, உற்பத்தி துறையில் ஆட்களை வேலைக்கு எடுப்பதை ஊக்குவிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

திட்டம் 1: புதிதாக வேலைக்கு சேர்ந்து முதன்முறையாக ஈபிஎப்ஓ-வில் பதிவு செய்யப்படும் நபர்களுக்கு அவர்களின் ஒரு மாத ஊதியம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட இருக்கிறது. அனைத்து முறையான துறைகளிலும் புதிதாக பணியில் சேரும் அனைத்து நபர்களுக்கும் இது பொருந்தும்.
இபிஎஃப்-வில் முதல் முறையாக பதிவு செய்யும் மாத ஊதியம் 1 லட்சம் ரூபாய் வரையுள்ள ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் அதிகப்படியாக 15,000 ரூபாயை ஊக்கத்தொகையாக அளிக்கப்படும். இது மூன்று தவணைகளாக நேரடியாக அவர்களின் ஈபிஎப்ஓ கணக்கிலேயே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 மாதங்களில் இவர்கள் வேலையை விட்டு சென்றால், நிறுவனம் இந்த ஊக்கத்தொகையை திரும்ப வழங்கி விட வேண்டும்.
திட்டம் 2: உற்பத்தி துறையில் கூடுதல் வேலை வாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டமானது அறிவிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் மற்றும் கார்ப்பரேட் அல்லாத நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக ஈபிஎப்ஓ பங்களிப்பை செய்யும் நிறுவனங்கள் இதில் பயன்பெற தகுதி பெறும். குறிப்பாக முதல்முறையாக பணிக்கு சேர்ந்த நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் பணியின் முதல் 4 ஆண்டு காலத்தில் மேற்கொண்ட ஈபிஎப்ஓ பங்களிப்பின் அடிப்படையில் அரசு இருவருக்கும் ஊக்கத்தொகை வழங்கும்.
திட்டம் 3: இது நிறுவனங்களை மையமாகக் கொண்டது. அதாவது அனைத்து துறைகளிலும் கூடுதல் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கத்தில் இது கொண்டுவரப்பட்டுள்ளது. மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளத்திற்குள் உள்ள அனைத்து கூடுதல் வேலைகளும் இதில் கணக்கீடு செய்யப்படும். 50 ஊழியர்களுக்கும் குறைவாக உள்ள நிறுவனத்தில் முந்தைய ஆண்டை விட கூடுதலாக குறைந்தபட்ச 2 ஊழியர்களையாவது புதிதாக வேலைக்கு சேர்த்திருக்க வேண்டும், அதே போல 50 ஊழியர்களுக்கும் மேல் உள்ள நிறுவனத்தில் முந்தைய ஆண்டை விட கூடுதலாக குறைந்தபட்ச 5 ஊழியர்களையாவது புதிதாக வேலைக்கு சேர்த்திருக்க வேண்டும்.
இந்த புதிய ஊழியர்களுக்காக நிறுவனம் செலுத்தும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கான ஈபிஎப்ஓ பங்களிப்பு தொகையை (அதிகபட்சம் 3,000 ரூபாய்) அரசு நிறுவனங்களுக்கு திரும்ப வழங்கிவிடும். திட்டம் 2இல் பயன்பெறுபவர்கள் இந்த திட்டத்திற்கு தகுதிபெற மாட்டார்கள்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications