டெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் யுபிஐ முறையில் நடைபெறும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் நிதி ஆண்டில் யூபிஐ பணப்பரிவர்த்தனைகளில் இந்தியா புதிய சாதனைகளை படைத்தது.
2024 ஆம் ஆண்டில் என்பிசிஐ எனப்படும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா யூபிஐ பரிமாற்றங்களில் ஐந்து முக்கிய மாற்றங்களை கொண்டு வந்தது.

பட்டன் போன்களை பயன்படுத்துபவர்களுக்கு சலுகை: என்பிசிஐ பட்டன் போன்களை பயன்படுத்தக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு யுபிஐ பேமெண்ட் வரம்பினை உயர்த்தியது. இதற்கு முன்பு பட்டன் போன்களை பயன்படுத்துவோர் மிஸ்டு கால் அல்லது ஐவிஆர் மூலம் ஒரு நாளைக்கு 5000 ரூபாய் வரை மட்டுமே யூபிஏ பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என இருந்தது. 2024 ஆம் ஆண்டு இது 10,000 ரூபாய் என உயர்த்தப்பட்டது.
யுபிஐ லைட் : யுபிஐ லைட் சேவைகளிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. பொதுவாக யூபிஐ லைட் சேவையினை பயன்படுத்துபவர்கள் தங்களுடைய வாலெட்டில் 2000 ரூபாய் வரை வைத்துக் கொள்ளலாம் என இருந்தது. அது தற்போது 5000 ரூபாய் என உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பின் நம்பர் உள்ளீடு செய்யாமலேயே ஒரு நாளைக்கு 5000 ரூபாய் வரை யுபிஐ லைட் மூலம் பரிவர்த்தனை செய்யலாம்.
டாப் அப் முறை: யுபிஐ லைட் பயன்படுத்துபவர்கள் தன்னுடைய வாலெட்டில் எப்பொழுதுமே குறைந்தபட்சம் 3,000 ரூபாய் இருக்க வேண்டும் என நிர்ணயம் செய்து விட்டால் அந்த பணம் குறையும் போது தானாகவே அவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்து இந்த யுபிஐ லைட் பேலன்ஸில் சேர்க்கப்பட்டு விடும். எனவே எப்போதுமே யுபிஐ லைட்டில் குறிப்பிட்ட தொகை பேலன்ஸாக இருக்கும்.
யுபிஐ வரம்பு: ஒரு யுபிஐ ஐடி-யில் இருந்து ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்ய முடியாது என்ற வரம்பு சற்றே தளர்த்தப்பட்டது. இதன்படி மருத்துவமனைக்கு கட்டணம் , கல்வி கட்டணம், ஐபிஓவிற்கு பணம் செலுத்துவது ஆகியவற்றுக்கு ஒரு நாளைக்கு 5 லட்சம் வரையும், காப்பீடு மற்றும் பங்குச்சந்தை தொடர்பான பரிவர்த்தனைகளுக்கும் ஒரு நாளைக்கு 2 லட்சம் ரூபாய் வரையிலும் செலுத்தலாம்.
யுபிஐ சர்க்கிள்: 2024 ஆம் ஆண்டில் யுபிஐ சர்க்கிள் என்ற ஒரு புதிய அம்சமும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது . இதன்படி ஒரு நபர் பிரதானமாக யுபிஐ கணக்கை கொண்டிருக்க வேண்டும் அவர் தன் குடும்பத்தினரை இதில் சர்க்கிள் உறுப்பினராக சேர்க்கலாம். பிரதான நபரின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை சர்க்கிளில் சேர்க்கப்பட்டவர்கள் பயன்படுத்தி யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யலாம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications