பெங்களூரு: டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பல விமானங்களை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளதை அடுத்து, அந்த விமானங்களில் பயணிக்கும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால், பயணிகள் தங்களது விமான டிக்கெட்டுகளை தாங்களாகவே கேன்சல் செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் விஸ்தார விமானங்களைப் பயன்படுத்துவதும் குறைந்துள்ளது. மேலும் மாற்று வழி தேட அதிக பணம் கொடுத்து வேறு விமான டிக்கெட் பெரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சமூக வலைதளங்களில், தங்களின் பிரச்சனைகள் குறித்து பேசிய பயணிகள், தற்போது விமானப் பயணக் கட்டணம் அதிகமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். விமானப் பயணக் கட்டண அதிகரிப்பு, விஸ்தார விமானங்களின் தொடர் ரத்து காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

பெங்களூரு-உதைபூர், டெல்லி-ஸ்ரீநகர், மும்பை-கொச்சி மற்றும் டெல்லி-இந்தூர் போன்ற ஊர்களுக்கான விஸ்தரா விமானங்களை ரத்து செய்தது. இந்நிறுவனம் தொடர்ந்து ரத்து செய்வது பற்றிய அறிவிப்புகளை வழங்கி வருகிறது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். மேலும், அவசர தேவைகளுக்கு பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள மருத்துவமனையின் சேஃப்டி கன்சல்டன்ட்டான அஸ்வின் சித்தராமையா, சமூக வலைதளங்களில் விமான ரத்து குறித்து பகிர்ந்துள்ளார், நான் 7500 ரூபாய்க்கு முன்பதிவு செய்த விமானத்தை விஸ்தாரா ரத்து செய்ததால் டெல்லியில் இருந்து பெங்களூருக்கு விமானத்தை முன்பதிவு செய்ய 16,000 ரூபாய் செலவழிக்க வேண்டியிருந்தது எனப் பகிர்ந்துள்ளார்.
டெல்லியில் இருந்து ஒரு பயணி, X பிளாட்ஃபார்மில், விஸ்தாராவிடம், ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பணத்தைத் திருப்பித் தருவீர்களா? எப்போது?எனக் கேட்டுள்ளார். மற்றொரு பயணியான அங்கூர் தேஷ்முக் மற்றும் அவரது நண்பர்கள் ஏப்ரல் 1ம் தேதி நள்ளிரவில் பெங்களூருவிலிருந்து மும்பைக்கு யுகே-864 என்ற விஸ்தாரா விமானத்தில் பயணம் செய்யவிருந்தனர். ஆனால் விமானம் தாமதமாகி இறுதியில் ரத்து செய்யப்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். நிதி நெருக்கடியில் இருப்பதாகவும், IndiGo உடன் மாற்று விமானத்தை முன்பதிவு செய்ய வேண்டியுள்ளதையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இந்திய சுற்றுலா சங்கங்களின் கூட்டமைப்பு உறுப்பினரான அஜய் பிரகாஷ், "இத்தகைய விமான ரத்து மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மக்கள் தற்போது விஸ்டாராவைத் தவிர்த்து வருகின்றனர். மேலும், விஸ்தாரா விமானங்களை முன்பதிவு செய்தவர்கள் வேறு வழிகளைத் தேடுகின்றனர். இந்த பிரச்சனையை விரைவில் சரி செய்யாவிட்டால், வரவிருக்கும் கோடை விடுமுறைக்கு இது ஏற்றதாக இருக்காது எனக் கூறியுள்ளார்.
விஸ்தார பல விமானங்களை ரத்து செய்து வருவதற்கான காரணங்கள் தொடர்பான விரிவான அறிக்கையை வழங்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு முன்பே உத்தரவிட்டிருந்தது.
விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறியதாவது, சில நாட்களாக விமான ரத்து மற்றும் விமான தாமதங்கள் அதிகரித்துள்ளதாகவும், பயணிகள் இல்லாதது போன்றபல காரணிகள் காரணமாக இருப்பதாகவும் ஒப்புக்கொண்டார். மேலும், வரவிருக்கும் கோடை கால அட்டவணையில் 25.22 சதவீதம் அதிக விமானங்களை விஸ்தார நிறுவனம் கொண்டு வர இருக்கிறது என்றும் அவர் கூறி இருந்தார். பயணிகளின் கஷ்டத்தை உணர்ந்து, கடுமையாக உழைத்து வருவதாகவும், அவர் கூறி இருந்தார்.


Click it and Unblock the Notifications