இந்தியாவில் விரைவில் கோடை விடுமுறை வர இருக்கிறது, ஏராளமானவர்கள் விடுமுறை ஒட்டி சுற்றுலா செல்ல விமானங்களை பயன்படுத்துவார்கள். அப்படி விமானம் மூலம் சுற்றுலா பயண திட்டமிட்டு இருப்பவர்களுக்கு மத்திய அரசு பெரிய இடியை இறக்கியுள்ளது.
மத்திய அரசு உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணங்களுக்கு விதித்திருந்த கட்டுப்பாட்டினை நீக்கி இருக்கிறது. எனவே இந்தியாவில் நாளை முதல் விமான கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன. கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோவில் ஏற்பட்ட குளறுபடிகளால் திடீரென நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி அடைந்தனர்.

கிட்டதட்ட 1 மாத காலம் இந்த பிரச்சினை நீடித்தது. திடீரென விமான சேவை ரத்து, பல மணி நேரம் விமான தாமதம் என பயணிகள் பல சிக்கல்களுக்கு ஆளாகினர். இந்தியாவில் உள்நாட்டு விமான சேவையில் இண்டிகோ 60% பங்களிப்பை கொண்டிருந்ததே இந்த நிலைக்கு காரணம். அந்த சமயத்தில் உள்நாட்டு விமான சேவைகளுக்கு டிமாண்ட் அதிகரித்தது.
எனவே டிமாண்ட் அதிகரித்ததால் மற்ற விமான சேவை நிறுவனங்கள் அதிக கட்டணங்களை வசூல் செய்ய தொடங்கின. இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் மத்திய அரசு விமான டிக்கெட்டுக்கு அதிக கட்டணங்களை விதிக்கக்கூடாது என அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி விமான நிறுவனங்கள் எக்கனாமிக் வகுப்பில் ஒரு வழி பயணங்களுக்கு அதிகபட்சமாக 18,000 ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என ஒரு உச்சவரம்பினை நிர்ணயம் செய்தது.
இந்த டிக்கெட் கட்டண உச்சவரம்பு இன்றுடன் நீக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இண்டிகோ விமான சேவை சீராகி இருப்பதாலும், ஈரான் போரால் விமான எரிபொருள் விலை உயர்ந்ததாலும் இந்த கெடுபிடிகளை விலக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்றுடன் இந்த கெடுபிடி நீக்கப்படுவதால் நாளை முதல் இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை கட்டணங்கள் தாறுமாறாக உயர போகின்றன.
ஈரான் போர் காரணமாக விமான எரிபொருள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, விமான எரிபொருள் விலையும் கூடி விட்டது , இதற்கிடையே மத்திய அரசு விமானங்களில் 60% இருக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் எதுவும் கேட்க கூடாது என அறிவித்து விட்டது இதனால் எங்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என விமான சேவை நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன.
இந்த சூழலில் தான் மத்திய அரசு டிக்கெட் கட்டண உச்சவரம்பினை நீக்கியுள்ளது. டிக்கெட் கட்டண கட்டுப்பாடுகளை நீக்கினாலும் , விமான டிக்கெட்டுகள் வெளிப்படையாகவும்ம் நியாயமாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அரசு கடிவாளம் போட்டுள்ளது. பண்டிகை காலங்களிலோ அல்லது அவசர காலங்களிலோ பயணிகளின் இயலாமையை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் விமான சேவை நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால் மீண்டும் விலை கட்டுப்பாடு கொண்டுவரப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications