உலகளவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிரச்சனை காரணமாக விமான சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மைக்ரோசாஃப்ட் அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் பல முக்கிய விமான நிறுவனங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல ஊர்களில் இருந்தும் புறப்படும் விமான சேவைகள் தடைபட்டுள்ளது.
ஏர் இந்தியா, இண்டிகோ, ஏர் ஏசியா போன்ற விமான சேவைகள் முடங்கி உள்ள காரணத்தினால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மைக்ரோசாப்ட் அப்ளிகேஷன்களின் செயலிழைப்பைத் தொடர்ந்து உலகம் முழுவதும் விமான சேவைகளை இது பாதித்துள்ளது. இதனால் நேற்று பிற்பகல் முதல் பல விமானங்கள் தாமதமாகி வந்தது. மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

மைக்ரோசாஃப்டின் இந்த பிரச்சனை காரணமாக பிளைட் ஆபரேஷன் சிஸ்டம்களில் பிழை ஏற்பட்டுள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் கைமுறையாக அனைத்து செயல்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகவே விமான தாமதங்கள் மற்றும் ரத்து போன்றவை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. டிஜிட்டல் முறையில் செய்வதற்கு ஏற்படும் நேரத்தை விட மேனுவலாக செய்யப்படும் செயல்முறைகளுக்கு சற்று நேரம் எடுக்கும் என்பதால் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளிதர் மோஹோல், மைக்ரோசாப்டின் கிளவுட் சேவைகளில் ஏற்பட்ட பிரச்சனை, இந்தியாவில் உள்ள விமான அமைப்பு உட்பட பல்வேறு துறைகளைப் பாதித்தது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆகியவை நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. இடையூறுகள் குறித்து பயணிகளுக்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு தனியார் விமான நிறுவனங்களுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளார்.
விமான சேவைகள் மட்டுமின்றி பங்கு வர்த்தக சேவைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி முக்கியமான பங்கு வர்த்தக நிறுவனங்களான ஏஞ்சல் ஒன், 5 பைசா மற்றும் நுவாமா போன்ற தரகு நிறுவனங்களின் அப்ளிகேஷன்களிலும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனால் Grow தாங்கள் மைக்ரோசாப்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தாத காரணத்தினால் எந்த வித பிரச்சனையையும் எதிர்கொள்ளவில்லை என்று கூறியுள்ளது.
மேலும் உலகெங்கிலும் உள்ள பயனர்களுக்கு Windows 10 புதிய அப்டேட் காரணமாக கம்ப்யூட்டர்கள் ப்ளூ ஸ்க்ரீன் என்னும் பிரச்சனையால் செயல் இழந்துள்ளது. ஒரு நாள் சேவையில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டாலும் அவை தினசரி வேலைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.


Click it and Unblock the Notifications