இந்தியாவில் ஈகாமர்ஸ் வர்த்தகத்தை அறிமுகம் செய்து முதல் முதலில் புத்தகங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யத் துவங்கி இன்று ஹேர்பின் முதல் அனைத்தையும் விற்பனை செய்யத் துவங்கியுள்ளது பிளிப்கார்ட். இந்த மாபெரும் பிளிப்கார்ட் நிறுவனத்தை உருவாக்கிய சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால் ஆகிய இருவருமே தற்போது வெளியேறியுள்ளனர்.
சச்சின் பன்சால் வெளியேறிய பின்பும் பல ஆண்டுகள் பின்னி பன்சால் தொடர்ந்து பிளிப்கார்ட் மற்றும் போன்பே நிர்வாகத்தில் இருந்த நிலையில், தற்போது மொத்தமாகப் பின்னி பன்சால் தனது பங்குகளை விற்பனை செய்துவிட்டு வெளியேறிவிட்டார்.

Flipkart இன் இணை நிறுவனரான பின்னி பன்சால், பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஆரம்பகால முதலீட்டாளர்களில் ஒன்றான Accel மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட டைகர் குளோபல் மேனேஜ்மென்ட் ஆகியவை ஒன்றாக இணைந்து இந்த இ-காமர்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
பின்னி பன்சால், Accel பார்ட்னர்ஸ், டைகர் குளோபல் ஆகிய மூவரும் தங்கள் பங்குகளை மொத்தமாக அமெரிக்காவின் வால்மார்ட்-க்கு விற்பனை செய்துவிட்டு வெளியேறியுள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவின் வால்மார்ட் பிளிப்கார்ட்-ஐ அடிமட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரையில் அதிகாரம் செய்ய உள்ளது.
பிளிப்கார்ட்-இன் மற்றொரு இணை நிறுவனரான சச்சின் பன்சால் தன்னிடம் இருந்த அனைத்து பங்குகளையும் 2018 இல் வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டு வெளியேறிய நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பின் பின்னி பன்சால் இதேபோன்ற முடிவை எடுத்துள்ளார்.
2018 விற்பனையில் பின்னி பன்சால் சிறிய அளவிலான பங்குகளை வைத்திருந்த நிலையில் தற்போது மொத்தமாகப் பின்னி பன்சால் தனது Flipkart பங்குகளை விற்பனை செய்துள்ளது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தான் துவங்கிய நிறுவனத்தில் சிறு அதிகாரம் கூட இல்லாத நிலை தான் தற்போது இருக்கிறது.
சச்சின் பன்சால் வெளியேறிய பின்பு முக்கிய முதலீட்டாளராக மாறினார், அவர் வெளியேறிய ஒரு வருடத்திற்குள் கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலரை பல முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்தார். இதேவேளையில் சச்சின் பன்சால் 2018 இல் நவி (NAVI) என்ற ஃபின்டெக் நிறுவனத்தையும் தொடங்கினார். சச்சின் பன்சால் Flipkart பங்குகளை வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்பதன் மூலம் 1 - 1.5 பில்லியன் டாலர் அளவிலான நிதியைத் திரட்டினார்.
பின்னி பன்சால் xto10x என்ற ஒரு ஸ்டார்ட்அப் ஆக்சிலரேட்டர் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தைப் பின்னி பன்சால் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஈகார்ட் பிரிவின் முன்னாள் தலைவரான சாய் கிரண் கிருஷ்ணமூர்த்தி உடன் இணைந்து நிறுவினார்.
இதன் மூலம் இனி சச்சின் பன்சால், பின்னி பன்சால் ஆகியோர் தற்போது அவர்களுடைய ஸ்டார்ட்அப் நிறுவனத்திலும், புதிய முதலீடுகளிலும் அதிகப்படியான கவனம் செலுத்த உள்ளனர்.


Click it and Unblock the Notifications