பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பின்னி பன்சால் ஆப்டிரா ( Opptra ) என்ற ஒரு புதிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்தியாவில் பின்னி பன்சால் மற்றும் சஞ்சய் பன்சால் ஆகியோரால் தொடங்கப்பட்டது தான் பிளிப்கார்ட் நிறுவனம். ஈ காமர்ஸ் பிரிவில் வெற்றிகரமாக இயங்கும் இந்த நிறுவனம் தற்போது வால்மார்ட் நிறுவனத்தின் வசம் சென்றுவிட்டது.
இந்நிலையில் பின்னி பன்சால் ஆப்டிரா என்ற புதிய ஸ்டார்ட் அப்பை தொடங்கி இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். Franchising தொழிலில் இருப்பவர்கள் அவர்களுடைய பிராண்டை ஆசிய சந்தை முழுவதும் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு தேவையான தொழில்நுட்ப ரீதியிலான அனைத்து உதவிகளையும் இந்த நிறுவனம் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் நிறுவனங்கள் தங்களுடைய பிராண்டுகளை மற்ற நாடுகளுக்கும் கொண்டு செல்வதற்கு ஆப்டிராவை பயன்படுத்திக் கொள்ளலாம் என பின்னி பன்சால் கூறியிருக்கிறார். ஆப்டிரா நிறுவனத்திற்காக அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களில் பணியாற்றி வந்த மூத்த நிலை அதிகாரிகளை இவர் பணி அமர்த்தியுள்ளார்.
இவர்களில் ரஞ்சித் பாபு கிளவுட் டெயில் என்ற மிகப்பெரிய விற்பனை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் அமேசான் இந்தியாவில் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு தலைவராகவும் செயல்பட்டு வந்தவர். இவர் ஆப்டிரா நிறுவனத்தின் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்று இருக்கிறார். கடந்த டிசம்பரில் அமேசானில் இருந்து வெளியேறிய இவர் ஆப்டிராவில் பணி செய்து வருவது தெரிய வந்துள்ளது.
அதேபோல லெண்டிங்கார்ட் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்த கிரிதர் யாஷா, ஆப்டிரா நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பொறுப்பேற்று இருக்கிறார். முன்னர் ஸ்விக்கியில் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஆனந்தராஜ் ஆப்டிரா நிறுவனத்தின் சர்வதேச சப்ளை விநியோக சங்கிலிக்கான தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார்.
ஆப்டிரா என்ற தாய் நிறுவனத்தின் கீழ் Exporio மற்றும் Terraspan என்ற இரண்டு நிறுவனங்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக செயல்பட தொடங்கியுள்ளன. எக்ஸ்போரியோ நிறுவனத்தை பொறுத்தவரை பேஷன் மற்றும் லைப் ஸ்டைல் பிரிவில் செயல்படும் நிறுவனங்கள் தங்களுடைய பிராண்டுகளை தென்கிழக்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளில் விரிவாக்கம் செய்வதற்கு உதவுகிறது. வீட்டு உபயோக மற்றும் சமையல் அறையில் பயன்படுத்தப்படும் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு உதவி செய்ய டெராஸ்பேன் பயன்படுகிறது.
தற்போதைக்கு ஆசிய நாடுகளை கவனமாகக் கொண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டிருப்பதாகவும் கூடிய விரைவில் இது உலகின் எந்தப் பகுதியிலும் என்ற கருத்தாக்கத்தின் கீழ் உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படுகிறது என்றும் பன்சால் கூறியுள்ளார் .


Click it and Unblock the Notifications