பெங்களூரில் பெய்த கனமழை நகரத்தையே ஸ்தம்பிக்க வைத்திருக்கும் நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று வெளியே வந்த பிளிப்கார்ட் ஊழியர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து கூறியுள்ளார். பொதுவாகவே பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களில் போக்குவரத்து அதிகமாக இருக்கும். அதுவும் மழைக்காலங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். பொதுமக்கள், மாணவ மாணவியர் பலருக்கும் இது பெரிய பிரச்சனையாக மாறியது. ஏனெனில் நேற்று ஏற்பட்ட மழை காரணமாக ஓலா, ராப்பிடோ போன்ற போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
ப்ரொபஷனல்களுக்கான தளமான கிரேப்வைனில் தனக்கு நடந்த சம்பவம் குறித்து ஃப்ளிப்கார்ட் ஊழியர் ஒருவர் பகிர்ந்துள்ளார். ஜோர்டான் லி என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் பிளிப்கார்ட் ஊழியர் தனது சமூக ஊடக தளத்தில், "இந்த மழையில் வாழ்வா சாவா என்ற சூழ்நிலையை எதிர்கொண்டேன்.

நான் வீட்டை விட்டு வெளியேறும் போது மழை பலமாக இருந்தது. ஆனால் சமாளிக்க முடியும் என்று கருதி வெளியே வந்தேன். நான் சோனி சிக்னலை அடைந்த பிறகு மிக கனமழை பெய்யத் தொடங்கியது. இதன் காரணமாக சாலைகள் மிகவும் மோசமாக இருந்தன. ஸ்கூட்டரில் பயணம் செய்து 80 அடி சாலையை கடந்த போது என்னுடைய ஸ்கூட்டர் வேலை செய்யாமல் போனது.
திடீரென்று ஒரு மின்சார கேபிள் தரையில் விழுந்ததை பார்த்தேன். நான் இருந்த இடத்திலிருந்து 10 மீட்டர் தொலைவில் தீப்பொறி தொடங்கியது. அதை பார்த்த எனக்கு மிகவும் பயமாகிவிட்டது. எனது ஸ்கூட்டரை அருகில் உள்ள எனது நண்பரின் வீட்டில் போட்டுவிட்டு ஓலா ஆட்டோவை புக் செய்தேன். இதில் மோசமான விஷயம் என்னவென்றால் நான் இருந்த இடத்திலிருந்து 6 கிலோமீட்டர் பயணம் செய்ய 500 ரூபாய் செலவானது.
ஓலா ஆட்டோ பிக்-அப் செய்ய வந்தபோது, டிரைவர் கூடுதல் பணம் கேட்டு, சவாரியை ரத்து செய்யுமாறு மிரட்டினார். நான் ஏற்கனவே ரொம்ப பயந்திருந்தேன். எனது ஸ்கூட்டரை எனது நண்பரின் வீட்டில் விட்டுவிட்டு வீட்டை அடைந்தேன். இந்தப் பதிவை போஸ்ட் செய்யும்போது கூட நடுங்கிக் கொண்டே தான் டைப் செய்தேன். முற்றிலும் தேவைப்படும் சூழல் ஏற்பட்டால் ஒழிய மக்கள் வெளியே வர வேண்டாம் என்று எழுதி இருந்தார்.
இந்திய வானிலை ஆய்வு மையம் அக்டோபர் 16, 17 ஆகிய தேதிகளில் பெங்களூர் நகருக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி சீரற்ற வானிலைக்கு வழிவகுக்கிறது.


Click it and Unblock the Notifications