அமெரிக்காவின் மிகப்பெரிய ரீடைல் நிறுவனமான வால்மார்ட் நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஃப்ளிப்கார்ட் (Flipkart) இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக இருக்கும் இதேவேளையில், இப்போது உணவு டெலிவரி சேவை தொடங்குவதற்கு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் முடிவு இத்துறையில் பெரும் ஆதிக்கம் செய்யும் Zomato மற்றும் Swiggy போன்ற நிறுவனங்களுக்கு பெரிய சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஃப்ளிப்கார்ட் ஏற்கனவே பிளிங்கிட், ஜெப்டோ, இன்ஸ்டாமார்ட் போன்றவற்றுக்கு போட்டியாக 10 நிமிட கிராசரி டெலிவரி சேவையை தொடங்கியுள்ள நிலையில், தற்போது அடிமடியில் கைவைக்கும் விதிமாக உணவு டெலிவரி துறைக்கு நுழைவது அதன் அடுத்த பெரிய நகர்வாக இருக்கப்போகிறது.

பெங்களூரில் சோதனை
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஃப்ளிப்கார்ட் தனது உணவு டெலிவரி சேவையை முதலில் பெங்களூரில் சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த சோதனை மே அல்லது ஜூன் மாதத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உணவு டெலிவரி சேவை இந்தியா முழுவதும் விரிவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரை தொடர்ந்து தமிழ்நாட்டு நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகியவை அடுத்த கட்டத்தில் இந்த சேவையைப் பெற வாய்ப்புள்ளது. காரணம் இந்தியாவில் வேகமாக வளரும் நகரங்களில் இந்த 4 நகரங்களும் உள்ளதால் பிளிப்கார்ட் இந்த நகரங்களில் வேகமாக விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனி ஆப் அல்லது ONDC?
இந்திய உணவு டெலிவரி சேவை துறையில் சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையில் ஃப்ளிப்கார்ட் புதிதாக உணவு டெலிவரியை எப்படி தொடங்கும் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இரண்டு வழிகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம் என்று தெரிகிறது.
முதலாவது: சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி போல தனி உணவு டெலிவரி ஆப் ஒன்றை உருவாக்குவது. இதற்கு நீண்ட காலதிட்டம், பெரும் நிதி முதலீடு ஆகியவை தேவை. இரண்டாவது: அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் ONDC (Open Network for Digital Commerce) தளத்தை பயன்படுத்தி முதலில் துவங்கிவிட்டு பின்னர் படிப்படியாக தனி ஆப் மூலம் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யலாம். இந்த இரண்டு வழிகளில் பிளிக்கார்ட் தேர்வு செய்வது எது..?
Poll: நீங்க பிளிப்கார்ட் தலைவராக இருந்தால் உங்களுடைய முடிவு எதுவாக இருக்கும்..? பதிலை கமெண்ட் பண்ணுங்க..
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஃப்ளிப்கார்ட் ONDC மூலம் உணவு டெலிவரி தொடங்க திட்டமிட்டது, ஆனால் இத்திட்டத்தில் முன்னேற்றம் இல்லாத காரணத்தால் கைவிடப்பட்டது. இப்போது மீண்டும் ONDC வழியாகவோ அல்லது தனி ஆப்பாகவோ தொடங்க வாய்ப்புள்ளது.
இந்திய உணவு டெலிவரி சந்தை எவ்வளவு பெரியது?
இந்திய உணவு டெலிவரி சந்தை தற்போது சுமார் 9 பில்லியன் டாலர் சந்தையாகும். அடுத்த 5 ஆண்டுகளில் இது பல மடங்கு வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது Zomato மற்றும் Swiggy ஆகிய இரு நிறுவனங்களே இந்த சந்தையை கட்டுப்படுத்தி வருகின்றன. சில சிறிய நிறுவனங்களும் போட்டியிடுகின்றன, ஆனால் அதுவும் மிகவும் சொற்ப பங்கீட்டை மட்டுமே கொண்டு உள்ளது.
இந்த கடுமையான போட்டி காரணமாக ஃப்ளிப்கார்ட் எப்படி வித்தியாசமான சேவையை வழங்கி வாடிக்கையாளரை பெற போகிறது என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது. இந்தியாவில் தற்போது அனைத்து டிஜிட்டல் சேவை நிறுவனங்களும் அவுட்கோயிங் வாடிக்கையாளர்களை தக்கவைக்க புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது.
தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன லாபம்?
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் Zomato மற்றும் Swiggy மிகவும் பிரபலம். ஃப்ளிப்கார்ட் உணவு டெலிவரி தொடங்கினால், இங்குள்ள லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் குடும்பங்கள் புதிய சாய்ஸ் பெறுவார்கள். இதேபோல் புதிய வேலைவாய்புகளை பிளிப்கார்ட் உருவாக்கும் என்பதால் வரவேற்கும் விதமாக உள்ளது.
இதேபோல் ஃப்ளிப்கார்ட்டின் பெரிய வாடிக்கையாளர் தளம் மற்றும் வலுவான டெலிவரி நெட்வொர்க் காரணமாக, இந்தியா முழுக்க வேகமாக வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications