பெங்களூரு: பிளிப்கார்ட் நிறுவனம் தங்களுடைய யுபிஐ சேவைகளை பிரபலப்படுத்தும் நோக்கில் பெங்களூருவில் 1 ரூபாய்க்கு ஆட்டோ ரைட் என்ற ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது. பெங்களூருவாசிகள் இதனை போட்டி போட்டு கொண்டு பயன்படுத்துகிறார்களாம்.
இந்தியாவில் தற்போது கூகுள் பே, பேடிஎம், அமேசான் பே ஆகியவை பிரபலமான யுபிஐ சேவைகளாக இருக்கின்றன. இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் தங்களுடைய யுபிஐ சேவைகளை பிரபலப்படுத்தும் நோக்கில் பெங்களூருவில் ஒரு பிரத்தியேக சலுகையை அறிவித்துள்ளது.

இதன்படி உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள பிளிப்கார்ட் நிறுவனம் தங்களுடைய யுபிஐ பேமெண்ட் அமைப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஆட்டோ ரைடுக்கு 1 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி பிளிப்கார்ட் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டதை அடுத்து பெங்களூரை சேர்ந்த பலரும் 1 ரூபாய்க்கு ஆட்டோ பயணம் மேற்கொள்வதற்கு போட்டி போடுகிறார்களாம். குறிப்பாக பிளிப்கார்ட் நிறுவனம் பெங்களூருவின் சில இடங்களில் கடைகளை அமைத்து தங்களுடைய பிளிப்கார்ட் யுபிஐ செயலியை எப்படி பயன்படுத்துவது அதனை கொண்டு 1 ரூபாய் மட்டுமே செலுத்தி எப்படி ஆட்டோ பயணம் மேற்கொள்வது என்பது குறித்து வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்துள்ளது.
தங்களுடைய பிக் பில்லியன் டேஸ் தள்ளுபடி விற்பனையின் ஒரு பகுதியாக பிளிப்கார்ட்நிறுவனம் இந்த ஆட்டோ பயண சலுகையும் அறிவித்துள்ளது. சமூக வலைதளங்களில் தற்போது இந்த சலுகை குறித்துதான் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
1 ரூபாய்க்கு எதுவுமே கிடைக்காது என கூறப்படும் இந்த காலகட்டத்தில் 1 ரூபாய் மட்டுமே செலுத்தி பெங்களூருவில் நினைத்த இடங்களுக்கெல்லாம் ஆட்டோவில் பயணம் செய்யலாம் என்ற இந்த பிளிப்கார்ட்டின் பிரத்யேக பிரச்சாரம் பயனாளர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
சமூக வலைத்தளங்களிலும் பிளிப்கார்ட்டின் இந்த முயற்சி தொடர்பாக பலரும் பதிவு செய்து வருகின்றனர். ஒரு பயனாளர் பிளிப்கார்ட்நிறுவனம் தங்களுடைய யுபிஐ சேவைகளை பிரபலப்படுத்துவதற்காக மிகச்சிறந்த ஒரு மார்க்கெட்டிங் ஐடியாவை நடைமுறைப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார். மற்றொரு பயனாளர் பெங்களூருவில் 1 ரூபாய்க்கு ஆட்டோ பயணம் என்பது கேட்பதற்கு அதிசயமாக தான் இருக்கும் ஆனால் பிளிப்கார்ட் யுபிஐ அதனை செய்து காட்டியுள்ளது என கூறியுள்ளார்.
தற்போது இந்த பிரச்சாரம் பெங்களூருக்கு மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் மற்ற நகரவாசிகள் தங்கள் நகரங்களிலும் இப்படி ஒரு திட்டத்தை பிளிப்கார்ட் அறிமுகம் செய்யுமா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Written by: Devika


Click it and Unblock the Notifications